மட்டக்களப்பில் பெண்களுக்கான இலவச வைத்திய முகாம் -புற்றுநோய் தொடர்பிலும் பரிசோதனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் புற்றுநோய் தாக்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக கண்டறியும் இலவச பரிசோதனைகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றன.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இலங்கை குடும்ப திட்ட சங்கத்தினால் இந்த இலவச மருத்துவ சோதனை முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதுவரை காலமும் கோவிந்த வீதியில் இயங்கிவந்த இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இன்றைய தினம் வாவிக்கரையில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதுடன் இந்த இலவச வைத்திய சோதனை முகாமும் நடாத்தப்பட்டது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய்த்தாக்கம் அதிகரித்து செல்லும் நிலையில் இந்த தாக்கத்தில் அதிகளவில் பெண்களே பாதிக்கப்படுவதாக சுகாதார பகுதி தெரிவித்துள்ள நிலையில் இந்த சோதனை முகாம் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி துஷார ஆகுஸ்,உதவி பணிப்பாளர் ஆர்.வி.பி.ராஜபக்ஸ,சிரேஸ்ட முகாமையாளர் திருமதி அமரா ரணசூரிய,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன், இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் மட்டக்களப்பு முகாமையாளர் ஆர்.ஜெயக்குமாரன்,நிகழ்ச்சி திட்ட உதவியாளர் இம்தியாஸ்,தேவைநாடும் மகளிர் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வைத்தியமுகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குகொண்டு மருத்துவ பரிசோதனைகளைப்பெற்றுக்கொண்டதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இந்த இலவச மருத்துவமுகாமில் பெண்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.