கருணா அம்மானுக்கு டிசம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதியாக இருந்த நிலையில் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொண்ட கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் டிசம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் பிரதி அமைச்சராக இருந்த கருணா அம்மான், அரசுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவிவகித்த காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலான முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் நிதிமோசடி பிரிவினால் இன்றைய தினம் விநாயகமூர்த்தி முரளிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு அடுத்த மாதம் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகரிகளுக்கு பணிப்புரை பிறப்பித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியான கருணா அந்த அமைப்பில் இருந்து விலகி பிள்ளையான் எனப்படும் சி. சந்திரகாந்தனுடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார்.

அக்கட்சியிலிருந்து விலகிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சராக பதவி வகித்திருந்தார்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு விசேட ஜுரிகள் சபை முன்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணையிலும் முன்னாள் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக கொலை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.