மட்டக்களப்பில் சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு உளவியல் விருது வழங்கும் நிகழ்வு

உடல்,உள பாதிப்புகளைக்கொண்ட பிள்ளைகளை ஒதுக்கவேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார்.

சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் ஏற்பாடுசெய்த உளவியல் விருது வழங்கும் விழா நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திருமதி தேவரஞ்சனி பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் ராஜன் மயில்வாகனம்,டாக்டர் திருமதி எஸ்.பரமகுருநாதன்,டாக்டர் ரி.கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் இயங்கிவரும் உள,சமூக உதவிக்குழுவினரால் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூக மனநல மேம்பாட்டிற்கான செயற்றிட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தினால் அகில இலங்கை ரீதியாக சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது அதிதிகளும் கௌரவிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் ராஜன் மயில்வாகனத்தின் ஏற்பாட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.