மட்டக்களப்பில் மாணவர்களை ஏற்றும் வானில் மரம் முறிந்து வீழ்ந்தது -மயிரையில் உயிர் தப்பிய மாணவர்கள்

மட்டக்களப்பு நகரி பிரபல பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் மாணவர்கள் பயணம் செய்யும் வான் மீது மரம் முறிந்து வீழ்ந்த நிலையில் குறித்த வானில் இருந்த மாணவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலை முடிந்த மாணவர்களை ஏற்றிச்செல்லும் வகையில் மட்டக்களப்பு தபால் நிலையத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது குறித்த வானில் மாணவர்கள் சிலர் இருந்துள்ளபோதிலும் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் காற்றுடன் கூடிய மழை இன்று காலையும் தொடர்ந்த நிலையில் இந்த நிலையேற்பட்டுள்ளது.

நூறு வருடத்திற்கு மேல் பழமையான குறித்த மரத்தின் ஒரு பகுதியே இவ்வாறு முறிந்துவீழ்ந்துள்ளது.

குறித்த பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வானில் வீழ்ந்துள்ள மரத்தினை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேவேளை நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்புகளுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வீசிய சுழல்காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மூன்று வீடுகளுக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையில் எச்சரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.