கிழக்கு மாகாணத்தில் உணவு விடுதிகள் 24மணி நேர கண்காணிப்பில் -கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன்

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல உணவு விடுதிகளும் 24 மணி நேரங்களும் கண்காணிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உணவு விடுதிகளையும் சோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகங்கள் இன்று வெள்ளிக்கிழமை(18) காலை சோதனைகளுக்கு உடபடுத்தப்பட்டன.இதன்போது சுகாதாரத்திற்கு உகந்தமுறையில் இல்லாத மூன்று உணவு விடுதிகள் மூடப்பட்டு அவர்களுக்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி தொடக்கம் சத்துருக்கொண்டான் வரையான பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மட்டக்களப்பு மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் என்பன இணைந்து இந்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தன.

இதன்போது பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டதுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்த மூன்று உணவு விடுதிகள் கால அவகாசம் வழங்கப்பட்டு மூடப்பட்டன.

அத்துடன் பல உணவு விடுதிகளுக்கு உணவு தரம் மற்றும் சுகாதார நடைமுறைகள் உட்பட உணவு விடுதியை சிறந்த முறையில் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையினை கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தலைமையிலான 35க்கும் மேற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ,உணவு பரிசோதகர்கள்,வைத்திய சுகாதார அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மூன்று குழுக்களாக பிரிந்து முன்னெடுத்தனர்.

பாதுகாப்பான உணவினை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையிலும் கிழக்கு மாகாணத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கையின் நோக்கம் உணவு விடுதிகளை மூடுவது அல்ல.இதுவரையில் பொத்துவில் பகுதியில் ஒரு விடுதியும் திருகோணமலையில் ஒரு விடுதியும் வாழைச்சேனை,ஓட்டமாவடியில் இரண்டும் மட்டக்களப்பில் இதுவரையில் மூன்றுமாக ஏழு விடுதிகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.

சோதனை நடவடிக்கையின்போது ஓரளவு திருத்திக்கொள்ளலாம் என கருதும் உணவு விடுதிகளை தொடர்ச்சியாக இயங்கச்செய்து குறைகளை நிவர்த்திசெய்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.அது தொடர்ச்சியாக அவ்வாறு செயற்படும்போது அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கான நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.