மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம்,வறட்சியை தடுக்க திட்டம் -மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தினை அச்சுறுத்தும் வெள்ளப்பிரச்சினை மற்றும் வறட்சி பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான பாரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது நவீன மயப்படுத்தப்பட்ட அரசி ஆலை நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

பி.சந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான இந்த அரிசி ஆலை 220 மில்லியன் ரூபா முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு இரு தடவையாக ( ஒரு தடவை 4மணித்தியாலங்கள்) 36000கிலோ அரிசியை உற்பத்தி செய்யக் கூடிய இயந்திரத் தொகுதியை கொண்டள்ள இந்த அரிசி ஆலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ,;; கலந்துகொண்டதுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்,மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

அதிகளவு விவசாய நிலங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடைசெய்யும் நெல்லை சரியான விலைக்கு வழங்குவதில் பெரும் கஸ்டங்களை விவசாயிகள் எதிர்நோக்கிவருவதுடன் இந்த மாவட்டத்தின் அரிசி தேவைகள் கூட வெளிமாவட்டங்களில் இருந்தே விநியோகம் செய்யும் துரதிர்ஸ்டவசமான நிலையிலேயே நாங்கள் உள்ளோம்.
நெல் விளையாத இடங்களில் எல்லாம் அரசி ஆலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு பெருமளவான நெல் உற்பத்தியை வழங்குகின்ற மாவட்டமாகவுள்ள மாவட்டமாகிய நாங்கள் அதனை சரியாக பயன்படுத்தாமல் பொருளாதாரத்தினை விருத்திசெய்யமுடியாமல் இருக்கின்ற நிலமையில் இந்த நவீனமயபடுத்தப்பட்ட நிலையில் திறக்கப்படும் அரசி ஆலை இப்பகுதி விவசாயிகளுக்கு சவால்களை குறைக்கும் என நம்புகின்றோம்.
வறட்சியும் வெள்ளமும் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த மாவட்டத்தில் உறுகாமம்,கித்துள்குளங்களை இணைப்பதற்கான வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு ஒக்டோர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.அதற்கான ஆய்வுகள் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளம்,குடிநீர்ப்பிரச்சினைகள்,விவசாயிகளின் நீர்ப்பிரச்சினைகள் உட்பட காலநிலைமாற்றங்களினால் உருவாகும் சவால்கள் தீர்க்கப்படவுள்ளன.
அதேபோன்று மட்டக்களப்பு நகரில் காணப்படும் குடிநீர்ப்பிரச்சினை,கழிவுகளை அகற்றுவதற்கான பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலான அறிக்கைகள் அடங்கியுள்ள நகர அபிவிருத்தி திட்டத்தை உலக வங்கியிடம் வழங்கியுள்ளோம்.இதன்மூலம் அறுபதுக்கு மேற்பட்ட திட்டங்கள் இந்த நகர மயமாக்களுக்குள் உள்வாங்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் வறட்சி நிலையினை போக்கும் வகையில் குடிநீர் விநியோக திட்டங்களுக்காக 1700மில்லியன் ரூபாவுக்கான செயற்றிட்டம் குறிப்பிட்ட அமைச்சிடம் கையளித்துள்ளோம்.மிகவிரைவில் அதற்கான நிதிகளை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை அச்சுறுத்தும் வெள்ளப்பிரச்சினை மற்றும் வறட்சி பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான பாரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.அதற்கான அனுமதிகள் உறுதியாக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டத்தில் காணப்படும் பாரிய சவால்களை தீர்க்கும் வகையில் பாரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள ஏழு வருடங்களில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவுள்ளது.அதற்கான அனைவரது முழுமையான பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றேன்.