டிசம்பர் 18 ல் இலங்கை இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல்.

(சசி துறையூர் ) 

நான்கவது இளைஞர் பாராளுமன்றத்திற்கு  225 பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர் வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக் கிழமைநாடளாவிய ரீதியில்  நடைபெறவுள்ளது.

02.12.2016ம் திகதி வேட்பு மனுத்தாக்கலுக்கான  இறுதித் தினமாகவும், வேட்பாளர்கள் 16.12.2016 நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கான கால எல்லையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 கெளரவ பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கையின் நாகரிகம் மிக்க அரசியல் கலாச்சாரம் ஒன்றினை ஏற்படுத்தும் முகமாக இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பினையும் பயிற்சியினையும் வழங்கும் நோக்கோடு தேசிய பாராளுமன்றத்திற்கு இணையாக முன்னெடுத்து வருகின்ற பாரிய வேலைத்திட்டம் இளைஞர் பாராளுமன்றம்.

கடந்த காலங்களில் முதலாவது இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்டதுடன். மூன்றாவது மற்றும் நான்காவது இளைஞர்பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் தொகுதிவாரியாக தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இம்முறை தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் 160 தேர்தல் தொகுதிகளுக்கும் 160 பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்டுவதோடு 65 பிரதிநிதிகள் பல்கலைக் கழகம், சட்டக்கல்லூரி, பாடசாலை , வெவ்வேறு இளைஞர் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்து அமைப்புக்கள் என்பவற்றில் இருந்துதெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.