மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை

(லியோன்)

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற  தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு  மட்டக்களப்பு மாவட்ட பிரதி  பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் .


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் இயங்கி வருகின்ற  தனியார் கல்வி நிலையங்களில் தொடர்ச்சியக நடத்தப்பட்டு கொண்டிருக்கும் வகுப்புகளினால் பாடசாலை மாணவர்களும் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் , தொடர்ச்சியாக நடத்தப்படும் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் ,மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்களுக்கு வீதியில்  பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்களினால்  மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்து மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதிபதிக்கு கிடைக்கப்பட்ட எழுத்து மூலமான முறைப்பாட்டுக்கு அமைய தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு குறித்த கல்வி  நிலையங்கள்  மற்றும்வீதிகளில் அநாவசிய முறையில்  இடையூறுகளை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும்  உடன் சட்ட நடவடிக்கையினை  மேற்கொள்ளுமாறு மாவட்ட பிரதி  பொலிஸ்மா அதிபருக்கு  நீதவான் நீதிமன்ற நீதிபதி   உத்தரவு பிறப்பித்துள்ளார் .

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு  பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் அநாவசிய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜார்படுத்துமாறும் மாவட்ட பிரதி  பொலிஸ்மா அதிபருக்கு நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்  .

ஞாயிற்றுக்கிழமை ,போயா தினம் மற்றும் விசேட தினங்களில் தனியார் கல்வி நிலையங்களில் மேலதிக வகுப்புகள் நடத்த கூடாது என பல்வேறு பட்ட தரப்புகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கும் எவ்விதமான முனேற்றகரமான செயல்பாடுகளையும் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் முன்னெடுக்க வில்லை எனவும்  முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது