கௌதம புத்தர் இருந்திருந்தால் மட்டக்களப்பு பிக்குவை மரத்தில் கட்டிவைத்து அடித்திருப்பார் –ஜனா

கௌதம புத்தர் உயிருடன் இருந்திருந்தால் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதியை மரத்தில் கட்டிவைத்து அடித்திருப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திற்கு விசேட திட்டங்கள் வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் உள்வாங்கப்பட்டுள்ளது தொடர்பிலும் அவர் வரவேற்பு தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் திருமதி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை வேலைகளுக்கான பொறியியலாளர் எ.ஏ.எம்.ஹக்கீம் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு சிறைச்சாலை உதவி அத்தியட்சர் எம்.எச்.அஸ்பர்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன்,உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார்,மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம சிறைச்சாலை உத்தியோகத்தர் என்.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு துறைகளில் சாதனைகளைப்படைத்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் மாகாண தேசிய மட்டங்களில் விளையாட்டுத்துறையில் பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையிலான பல்வேறு கலை நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பெற்றொர்கள்.பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர்,
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காணும் வகையில் பாராளுமன்றத்தினை அரசியல் சபையாக மாற்றி  புதிய யாப்பினை உருவாக்கும் பணிகள் நடைபெற்றுவரும் இந்தவேளையில் வடகிழக்கில் மட்டுமன்றி தெற்கிலும் இந்த யாப்பினை உருவாக்கவிரும்பாத தீயசக்திகள் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் ஸ்திரத்தன்மையை குழப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மூன்று இனங்களும் வாழும் இந்த கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் ஒரு சில தீயசக்திகள் காணிகளை அபகரிப்பதிலும் குடியேற்றங்களை செய்வதிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல தேரர் கச்சக்கொடிசுவாமி மலை கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடு பகுதியில் காணிகளை பிடித்துவிட்டு அதற்கு ஒப்பம் வழங்கவேண்டும் என போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தார்.இதே பிக்கு கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மங்கலராமய விகாரையில் மி;ன்சார பட்டியல் செலுத்தாத காரணத்தினால் மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சாரசபை ஊழியர்கள் பிக்குவால் தாக்கப்பட்டனர்.

அதேபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு வந்தபோது அவரது விகாரைக்கு செல்லவில்லையென்பதற்காக அங்கு திறக்கப்படவிருந்த நினைவுப்படிவத்தை உடைத்து எறிந்தார் குறித்த பிக்கு.பட்டிப்பளை பிரதேச செயலாளராக முன்னர் சிவப்பிரியா வில்வரெட்னம் இருந்தபோது அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து பெண் அதிகாரி என்று கூட பார்க்காமல் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டார்.

அதனைவிட கடந்த வாரம் மட்டக்களப்பில் சிங்களவர்களை குடியேற்றுமாறு அம்பாறை-மஹாஓயா வீதியை மறித்து போராட்டம் நடாத்தியபோது அங்குசென்ற பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அப்பகுதி கிராம சேவையாளரையும் மிக கேவலமான முறையில் பேசியுள்ளார்.

கௌதம புத்தர் அவர்கள் காவியுடை தரித்தவர்,மக்களுக்கு நல்ல போதனைகளை செய்தவர்,எல்லோரும் ஓழுக்கசீலர்களாக வாழவேண்டும் என்ற போதனையினை செய்த அந்தவழியில் வந்த அவரை ஓரு தேரர் என்று கூறுவதில் நாகூசுகின்றது.அவர் ஒரு காவியுடை தரித்த காவாலி.கடையன் என்றுதான் நான்கூறுவேன்.இன்று கௌதம புத்தர் உயிருடன் இருந்திருந்தால் குறித்த தேரரை உச்ச கோபம் காரணமாக மரத்தில் கட்டிவைத்து அடித்திருப்பார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாணசபைக்கு காணி அதிகாரங்கள் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.அதிகார பரவலாக்கல் இந்த நாட்டில் முழுமையாக நடைபெறுமாகவிருந்தால்,அந்த அதிகார பரவலாக்கலுடன் 13வது திருத்தசட்டம் முழுமையாக நிறைவேற்றப்படுமாகவிருந்தால் வடக்கு கிழக்கு இணைந்திருந்தாலும் பிரிந்திருந்தாலும் காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டு குறித்த அம்பிட்டிய தேரரை கைதுசெய்து சிறையில் அடைக்கும் நிலையேற்பட்டிருக்குமு;.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும்.இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை இரண்டாம் தரமாக நடாத்தும் இவ்வாறான பிக்குகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கவேண்டுமானால் சிறுபான்மை சமூகம் இணைந்திருக்கவேண்டும்.

வடகிழக்கில் உள்ள சிறுபான்மை மக்கள் ஒன்றாக இணைந்து இந்த நாட்டில் ஆட்சிமாற்றத்தினை எவ்வாறு ஏற்படுத்தினார்களோ அதேபோன்று இணைந்த வடகிழக்கிற்குள் எங்களுக்குள்ள அதிகாரங்களை நாங்கள் பகிர்ந்து எங்களது பிரதேசங்களை நாங்கள் காப்பாற்றவேண்டும்.நாங்கள் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் கிழக்கு மாகாணத்தினையும் பறிகொடுக்கும் நிலையே ஏற்படும்.