சர்வதேச பாரிசவாத தினத்தினை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு

(லியோன்)

பாரிசவாத நோயினால் பாதிக்கப்படும் ஒருவருக்கு நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை வழங்கும்போது அந்த நோயில் இருந்து அவரை காப்பாற்றமுடியும் என இலங்கை பாரிசவாத சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நோய் வைத்திய நிபுணருமான டாக்டர் எம்.ஐ.றிஸ்வி தெரிவித்தார்.


சர்வதேச பாரிசவாத தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (13-10-2016) காலை காந்தி பூங்கா முன்றிலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் டாக்டர் திவாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை பாரிசவாத சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நோய் வைத்திய நிபுணருமான டாக்டர் எம்.ஐ.றிஸ்வி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக இலங்கை பாரிசவாத சங்கத்தின் செயலாளர் டாக்டர் பத்திரண,மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.எஸ்.இப்ராலெப்பை உட்பட வைத்திய நிபுணர்கள்,அரச அதிகாரிகள்,பாடசாலை மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது விரைவாக செயற்படுவோம் என்னும் தலைப்பிலான பாரிசவாத நோய் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் தாதியர் சௌக்கிய பராமரிப்பு பீட மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டது.

அத்துடன் வைத்திய நிபுணர்களினால் உருவாக்கப்பட்ட கீறல் என்னும் குறுந்திரைப்படமும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
இலங்கையில் அதிகளவு உயிரிழப்பினை ஏற்படுத்தும் தொற்றா நோயாக பாரிசவாதம் இருந்துவருவதாகவும் அது தொடர்பில் போதிய அறிவு அற்றவர்களாக மக்கள் இருந்துவருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

பாரிவாத நோயினால் ஒருவர் பாதிக்கப்படும்போது அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வைத்திய நிபுணர் றிஸ்வி,பாரிசவாத நோயினை குணப்படுத்தமுடியாது என்ற கருத்த இன்று பலரிடம் உள்ளது.முன்னைய காலத்தில் அந்த நிலைமை காணப்பட்டாலும் இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது.பாரிசவாத நோயினை குணப்படுத்துவதற்கான ஊசி மருந்துகள் பெரும் விலைகொடுத்து இறக்குமதிசெய்யப்பட்டுள்ளது.ஒரு ஊசியின் விலை சுமார் இரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா ஆகும்.

இந்த மருத்துவ வசதிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் வழங்கப்படுகின்றன.பாரிசவாத நோயினால் பாதிக்கப்படும் ஒருவரை நான்கரை மணித்தியாலத்திற்குள் வைத்தியசாலைக்கு கொண்டுவரும்போது அந்த நோயினை குணப்படுத்தமுடியும்.அதன் பிறகு கொண்டுவந்தாலும் சிகிச்சை வழங்கமுடியும் ஆனால் குணப்படுத்து என்பதை உறுதியாக கூறமுடியாது என  தெரிவித்தார்