வரலாற்று சிறப்புமிக்க ஆரையம்பதி கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று நண்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மீன்பாடும் தேன்நாட்டில் மட்டக்களப்பு தெற்கே மண்முனைப்பற்று பிரதேசத்தில் ஆரையம்பதி என்னும் பதியில் நூற்றாண்டுக்கு மேல் பழமைவாய்ந்தது ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயம்.

இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கிரியைகள் நேற்று புதன்கிழமை ஆரம்பமானதுடன் இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

இன்று காலை விநாயகப்பெருமானுக்கு விசேட அபிசேக ஆராதனையும் மூலமூர்த்தியாகிய கந்திசுவாமி பெருமானின் வேலுக்கு அபிசேக ஆராதனையும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலை ஆலயத்தினை சுற்றிக்கொண்டுவரப்பட்டது.

இதன்போது கொடித்தம்பம் அருகே விசேட பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி தேர் திருவேட்டைத்திருவிழா நடைபெறவுள்ளதுடன் 14ஆம் திகதி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

இறுதி உற்சவமான தீர்த்தோற்சவம் 15ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆலயத்தின் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளதுடன் மறுதினம் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெறவுள்ளது.