மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 289 மாணவர்கள் சித்தி

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வெளியாகியுள்ள ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று 289 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 229 மாணவர்கள் சித்தியடைந்திருந்த நிலையில் இந்த ஆண்டு அது 289ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வலய கல்வி பணிப்பாளர்,
மட்டக்களப்பின் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு அருணோதய வித்தியாலய மாணவி ஒருவரும் புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவி ஒருவரும் 186 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் மூன்றாம் நிலையில் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய உயர்தர மகளிர் பாடசாலையில் 57 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் புனித மைக்கேல் கல்லூரியில் 34மாணவர்களும் புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் 41மாணவர்களும் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் 40மாணவர்களும் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 28 மாணவர்களும் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலத்தில் 15மாணவர்களும் சிவானந்தா தேசிய பாடசாலையில் 12 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கோட்டத்தில் 254மாணவர்களும் மண்முனைப்பற்று கோட்டத்தில் 23 மாணவர்களும் ஏறாவூர்ப்பற்றில் 12 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு சித்தி வீதம் அதிகரித்துள்ளதாகவும் சித்தி வீதமானது 60 வீதத்தினையும் தாண்டியதாக காணப்படுதாகவும் வலய கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.