மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தினை அரசியல்வாதிகள் புறக்கணிப்பு

மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள் புறக்கணித்துவருவது தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த தமிழ் அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வதில்லையெனவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஒரு தமிழ் அரசியல்வாதியை தவிர வேறு எந்த தமிழ் அரசியல்வாதியும் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது.

அத்துடன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி தொடர்பில் தீர்மானிக்கப்படுகின்றமையினால் தமது பகுதி தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையே இருந்துவருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நகர் பகுதி மற்றும் புறநகர்ப்பகுதியை கொண்டிருக்கின்றது.இங்குள்ள புறநகர்ப்பகுதி பெருமளவான குறைபாடுகளுடனும் பிரச்சினைகளுடனும் காணப்படும் நிலையில் மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்கை தவிர வேறு எந்த அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளவில்லை.

மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கவேண்டும். மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் மக்கள் நலன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தவேண்டும்.பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்பதற்காகவே பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கொண்டுநடாத்தப்படுகின்றது.

எனினும் தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி அரசியல்வாதிகள் செயற்படுவது கவலைக்குரியது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.