திடீர் விபத்து மற்றும் அனர்த்தங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாத்தல்

 (லியோன்)

பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் தமது பொறுப்புக்களை மறந்து விடுவதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

 திடீர் விபத்து மற்றும் அனர்த்தங்களில் இருந்து சிறுவர்களை  பாதுகாத்தல் தொடர்பான கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் திடீர் விபத்து மற்றும் அனர்த்தங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பு பெறும் முறைமை  தொடர்பாக பெற்றோர்களுக்கான  விழிப்புணர்வு கருத்தரங்கு  பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் மட்டக்களப்பு புன்னச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புன்னச்சோலை பாளர் பாடசாலை அதிபர் செல்வி .அருந்தவம் , மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவுருத்தி மேம்பாட்டு உத்தியோகத்தர்  டி .மேகராஜ் , பாலர் பாடசாலை ஜப்பான் ஜெய்கா திட்ட உத்தியோகத்தர் , செல்வி .அசாமியா மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி . குகதாசன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் . திருமதி . சிவபாதசேகரம் மற்றும் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற அனர்த்தம் அதனை எவ்வாறு பெற்றோர்கள்  தவிர்த்துக்கொள்ளலாம் என்பது தொடர்பான கருத்தரங்காக இது  அமைகின்றது

இன்று பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் தமது பொறுப்புக்களை மறந்து விடுகின்றனர் . கற்பிப்பது ஆசிரியர்களின் தொழிலாகவும்,  அவர்களை பாதுகாப்பது பொலிசார் மற்றும் ஆசிரியர்களின்  வேலை என்கின்ற சிந்தனையில்  வாழ்ந்து வருகின்றனர்  .

தற்போதைய சூழல் நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிபடுத்தலாம் என்பது தொடர்பாக பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
தாயும் தந்தையும் இணைந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.


அதற்காக இவ்வாறான நிகழ்வுகளில் பெற்றோர் கலந்துகொண்டு பூரண அறிவை பெற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பங்கு பெற்றோர்களுக்கு இருப்பதாக பிரதேச செயலாளர்  தெரிவித்துக்கொண்டார் .