மட்டக்களப்பு பிரசித்திபெற்ற பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய திருவிழா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா இன்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
புதிய ஆலய திறப்பு விழாவுடன் வருடாந்த திருவிழா கடந்த 05ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வருடாந்த திருவிழாவில் நேற்று மாலை அன்னையின் திருச்சொரூப பவனி ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருச்சொரூப பவனியையொட்டி வீதிகள் தோறும் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் சொரூபங்களும் வீதிகளில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.

திருவிழாவின் கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், திருப்பலி வேளையில் பிள்ளைகளுக்கான முதல் நன்மை, உறுதிப்பூசுதல் என்பன ஆயரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது நாட்டில் நீடித்த சமாதானம் ஏற்படவேண்டும் என்பதை வலியுறுத்தி விசேட பூஜையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

விசேட கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து அடியார்களுக்கு ஆசிர்வாதம் ஆயரினால் வழங்கப்பட்டு கொடியிறக்கும் நிகழ்வு பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இந்த இறுதிநாள் விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டதுடன் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகளும் கலந்தகொண்டனர்.