பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு தரம்வாய்ந்த அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு தரம் வாய்ந்த அதிபர் ஒருவரை நியமிக்கவேண்டும் என பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனர் ,மாகாண கல்வி அமைச்சர் ஆகியோரிடம் இந்த கோரிக்கையினை பெரியகல்லாறு பிரதேசத்தினை சேர்ந்த பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

பெரியகல்லாறு மத்திய கல்லூரி மிகவும் பழமைவாய்ந்த பாடசாலை என்பதுடன் 01ஏபி பாடசாலையாகவும் உள்ளது.இங்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து மாணவர்கள் வருகைதந்து கல்வி கற்று வருகின்றனர்.

எனினும் அண்மைக்காலமாக பெரியகல்லாறு பல்வேறு வழிகளிலும் பின்னடைவினை எதிர்கொண்டுவருவதுடன் பாடசாலையின் செயற்பாடுகளும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டுள்ளது.

இந்த நிலையில் பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் நீண்டகால விடுமுறையில் சென்ற நிலையில் புதிய அதிபர் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதற்காக பாடசாலை அதிபர் நியமனத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் மத்திய கல்லூரிக்கான அதிபர் தரமும் கோரப்பட்டிருந்தது.அதாவது அதிபர் தரம் இன்று மற்றும் இரண்டு தரங்களைக்கொண்ட அதிபர்கள் இந்த நியமனத்திற்காக கோரப்பட்டிருந்தது.

எனினும் விண்ணப்பம் கோரப்பட்டதற்கு அமைவாக அதிபர் நியமிக்கப்படாமல் மூன்றாம் தரம் உடைய அதிபர் ஒருவர் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த அதிபர் ஆரம்ப பிரிவு பாடசாலைக்கு அதிபராக கடமையாற்றிவந்த நிலையிலேயே பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளரிடம் வினவியபோது,
மாகாண கல்வி திணைக்களத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பம் கோரப்பட்ட தரத்திற்கு அதிபர்கள் யாரும் விண்ணப்பிக்காத நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும் கோரப்பட்ட தரத்திற்கு தரமுடைய அதிபர்கள் யாரும் விண்ணப்பிக்காதபட்சத்தில் இரண்டாம் தடைவ அதற்கான விண்ணப்பத்தினை கோரி புதிய அதிபரை நியமிக்கும் நிலையிருப்பதனால் 01ஏபி பாடசாலைக்குரிய தரம் இல்லாத அதிபரை நியமிக்கவேண்டிய தேவையில்லையெனவும் பெற்றோர் பழைய மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்தவிடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர்,கல்வி அமைச்சர்,தலையிட்டு தரம்கொண்ட அதிபரை நியமனம் செய்வதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.