சிறப்பாக நடைபெற்ற விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம்

கிழக்கிலங்கையில் மிகவும் பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிசேகம் இன்று புதன்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
மீன்பாடும்தேனாடு என போற்றப்படும் மட்டக்களப்பு நகருக்கு மேற்கே கலை,கலாசாரத்திற்கும் பக்தி வழிபாட்டிற்கும் புகழ்பூத்து விளங்கும் படுவான்கரையின் வவுணதீவு பிரதேசத்திற்கு அப்பால் உள்ள பழம்பெரும் பதியான விளாவட்டவானில் நூற்றாண்டு கடந்து அற்புதங்கள்புரியும் ஆலயமாக விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் விளங்கிவருகின்றது.

மரகத சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் வீரமாகாளியம்மனின் கும்பாபிசேக கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்த கும்பாபிசேக தினத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையில் மூலமூர்த்தியை அம்மனாக கொண்ட ஆலயத்தில் மிகவும் உயர்ந்த ஆறடி திருவுருவச்சிலையை கொண்டதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.பரிபாலன தெய்வங்களாக பிள்ளையார், நாகராஜா, மாரியம்மன், நரசிம்ம வைரவர் ஆகிய ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றிற்கான எண்ணைக்காப்பும் சாத்தப்பட்டது.

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தற்புருஷ சிவாச்சாரியர் சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்களினால் கிரியைகள் நடாத்தப்பட்டது.இன்று அதிகாலை புண்ணியாகவாசனம்,விசேட ஹோம வழிபாடுகள்,சதுர்வேத தோத்தரபராயணம் என்பனவற்றுடன் நாத,வேத,ஆரோகரா கோசங்களுடன் மூலஸ்தான தூபி கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதான கும்பம் மூலஸ்தானம் கொண்டுசெல்லப்பட்டு அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

இதன்போது தேவர்களுக்கான விசேட யாகம் நடாத்தப்பட்டதுடன் தசமங்கள தரிசனமும் நடைபெற்றது.கும்பாபிசேகத்தினை தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிசேக பூஜைகளும் நடாத்தப்படவுள்ளது.