மூன்று ஆசிரியர்களின் இடமாற்றத்தினை இடைநிறுத்த மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தினை இடைநிறுத்தி பழைய பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் உத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ளது..
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கோரி மூன்று ஆசிரியர்களினால் நேற்று மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஆசிரியர்களின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.

இதன்போது ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லையெனவும் வருடாந்த ஆசிரிய இடமாற்றம் என்று கூறப்படுகின்றபோதிலும் வருடத்தின் நடுப்பகுதியில் இந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி பே.பிரேம்நாத்தினால் நீதிமன்றில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் குறித்த ஆசிரியர்களில் ஒருவர் ஐந்தாம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கும் ஒருவர் கா.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவர்களுக்கும் கல்வி கற்பித்துவருவதன் காரணமாக குறித்த இடமாற்றம் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பதிலீடுகள் இன்றியே இந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சரியான ஆசிரிய இடமாற்ற கொள்கை இல்லாத நிலை காணப்படுவதாகவும் சரியான இடமாற்ற கொள்கை தயாரிக்கப்படுவதற்கான உத்தரவை நீதிமன்றம் விடுக்கவேண்டும் எனவும் சட்டத்தரணி பிரேம்நாத் நீதிவானிடம் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் வாதப்பிரதிவாதங்களை உள்வாங்கிக்கொண்ட மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி வழக்கு முடியும் வரையில் குறித்த ஆசிரியர்களின் இடமாற்றத்தினை இடைநிறுத்தி முன்னைய பாடசாலைகளில் தமது கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.