மட்டக்களப்பில் உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விசேட செயல்திட்டம்

சித்திரவதைகள் இல்லாத மனிதகுலத்தின் பெருமையை மதிக்கும் ஒரு சமூகத்தினை உருவாக்கி சிறந்த சமூகம் கொண்ட நாட்டை கட்டியெழுப்பும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு “ மனிதகுலத்தின் பெருமையை மதிக்கும் ஒரு சமூகம் “ எனும் தொனிப்பொருளில் இந்த திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் இன்று மட்டக்களப்பு கோப் இன் விடுதி கேட்போர் கூடத்தில் குடும்ப புனர்வாழ்வு நிலைய பிராந்திய திட்ட இயக்குனர் எஸ் . சதிஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில்   பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ் .ரங்கநாதன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர் வைத்தியர் எம் எஸ் .எம் . ஜாபிர் , மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என் .பிரபாகரன் , மட்டக்களப்பு பிரதேச மனித உரிமை ஆணைக்குழு இனைப்பாளர் ஜனாப் எ .சி .எஸ் . அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டு சித்திவதைகள் தொடர்பாகவும் அவற்றினை அகற்றுவதற்கு தேவையான நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.

இந்த செயலமர்வில் அரச திணைக்கள அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் , வைத்திய அதிகாரிகள் , சிறைச்சாலை அதிகாரிகள் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக சீர்குலைந்துள்ள சட்ட நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.