மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும் -கல்வி இராஜாங்க அமைச்சர் உறுதி

இலங்கையின் முதல் பாடசாலை என்ற புகழைக்கொண்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இலங்கையின் முதல் பாடசாலையாக கருதப்படும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த அமைச்சர் பாடசாலைகளின் நிலைமையினை பார்வையிட்டார்.

1814ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை கடந்த காலங்களில் அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டுவந்தது.

இது தொடர்பில் பாடசாலையின் பழைய மாணவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோடீஸ்வரனினால் கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு பாடசாலைகளின் நிலைமை கொண்டுசெல்லப்பட்டது.

இதன்போது பாடசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் பாடசாலையின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன் பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் கல்வித்திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இலங்கையின் மிகவும் பழமைவாய்ந்த குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

இலங்கையின் கல்வித்துறையின் மிகவும் பழமையினை தமிழ் பாடசாலையொன்று சுமந்து நிற்பதைக்கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவற்றினை புனரமைக்க நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார்.

பாடசாலையின் கட்டிடங்கள் மிகவும் பழமைவாய்ந்தவை எனவும் அவற்றிலேயே மாணவர்கள் கல்வி கற்றுவருவதாகவும் அத்துடன் பாரிய இடநெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

குறிப்பாக பௌதீக வளங்களை பூரணமாக பூர்த்திசெய்ய நடவடிக்கையெடுக்குமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.