ஏறாவூருக்கு ஜனாதிபதியின் விஜயம் பிற்போடப்பட்டுள்ளது

தனது அழைப்பின் பேரில் தொழிற்சாலைகளைத் திறந்து வைப்பதற்காக பெப்ரவரி (இன்று சனிக்கிழமை)06 ஆம் திகதி ஏறாவூருக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதியின் விஜயம் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

 இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், ஆயிரக்கணக்கான வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய தொழிற்சாலைகளைத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெப்ரவரி 6 ஆம் திகதி ஏறாவூருக்கு வருகை தரவிருந்தார்.

வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 ஆறு தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது.

இதனடிப்படையில் முதற்கட்டமாக ஒரு ஆடைத் தொழிற்சாலை, கைத்தறித் தொழிற்சாலைகள் இரண்டு என்பவை பெப்ரவரி 6 ஆம் திகதி ஏறாவூரில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவிருந்தன.

எனினும், வெகுவிரைவில் ஜனாதிபதியைக் கொண்டு இந்தத் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் மூலம் ஏறாவூரில் நேரடியாக ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 2000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.