உங்களின் தனிப்பட்ட அரசியல் பிரச்சினைகளில் எங்களை இழுத்துப் போட வேண்டாம் - கிழக்கு முதலமைச்சருக்கு அமைச்சர் இராதாகிருஸ்ணன் சாட்டை

நான் மத்திய மாகாணத்தில் 10 வருடங்களாக மத்திய மாகாண அமைச்சராக இருந்து நாடாராளுமன்றம் வந்தவன் என்ற வகையில் எனக்கு மாகாண சபையின் அதிகாரம் அதன் செயற்பாடுகள் எல்லாமே நன்கு தெரிந்தவன்.உங்களின் தனிப்பட்ட அரசியல் பிரச்சினைகளில் எங்களை இழுத்துப் போட வேண்டாம் என கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து  ஊடக அறிக்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இசட்.ஏ.நசீர் அஹமட் கல்வி இராஜாங்க  அமைச்சர் மாகாண அதிகாரங்களுக்கு சவால் விடுக்கின்றார் என்ற தலைப்பில் தெரிவித்துள்ள கருத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை குறைப்பதற்கோ அல்லது அவர்களின் செயற்பாடுகளில் தலையிடுவதற்கோ விரும்பாத ஒருவன்.

காரணம் என்னை பொறுத்தவரை மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை அன்று முதல் வழியுறுத்தி வருபவன். மாகாண சபையில் நானும் 10 வருடங்களாக அமைச்சராக இருந்திருக்கின்றேன்.

ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்தானது முற்றிலும் பிழையான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன்.  அரசியல் அனுபவம் அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒருவருடைய செயற்பாடாகவே நான் இதனை கருதுகின்றேன்.  மேடை பேச்சு என்பது நாகரீகமாக இருக்க வேண்டும்.  நமது கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரையும் சென்றடைகின்ற காரணத்தால் என்ன பேசுகின்றோம், எங்கே பேசுகின்றோம் என்பதை தெரிந்து கொண்டு பேசுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

நான் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறுவது போல ஒரு இரவில் வந்து திறப்பு விழா செய்துவிட்டு சென்றவன் அல்ல.  மூன்று நாட்களாக கிழக்கு மாகாணத்தில் திருக்கோயில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், அக்கரைபற்று இராமகிருஸ்ணன் மத்திய வித்தியாலயம்,  மட்டக்களப்பு வின்சன் உயர் மகளீர் கல்லூரி, மட்டக்களப்பு இந்து கல்லூரி.  நாவற்காடு நாமகள் வித்தியாலயம், கிரன் மத்திய மகா வித்தியாலயம், ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலம் உட்பட அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை, தேசிய கல்வியல் கல்லூரி, மட்டக்களப்பு மத்திய கல்லூரி, மட்டக்களப்பு சென் மைக்கள் கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை போன்றவற்றில் நடந்த நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும், குறை நிறைகளை  கண்டறிவதிலும் திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டேன்.

என்னுடன் நாடாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன், கோடீஸ்வரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் இறுதி நாள் நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜனாப் எம்.டி.ஏ.நிசாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாடசாலைகளில் நடைபெற்ற திறப்பு விழா தொடர்பாக ஏற்கவே எனது அமைச்சின் மூலம் முதலமைச்சருக்கு அறிவிக்கபட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவித்துள்ளனர்.   பாடசாலை அதிபர்கள் தனிபட்ட ரீதியில் அழைப்பிதல் வழங்கியுள்ளார்கள்.

முதலமைச்சரின் பெயரை அழைப்பதலில் போடுவதற்கு அதிபர்களால் அனுமதி பெறப்பட்ட பின்பே அழைப்பிதழ்கள் அச்சிடபட்டுள்ளன.  திறப்பு விழாக்கள் செய்யப்பட்ட பாடசாலைகளில் திறப்பு பலகைகளில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந் நிலையில் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரின் அறிக்கை கேலி கூத்தாகவே இருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி சுசவீனம் காரணமாக அனைத்து நிகழ்வுகளுக்கும் வரவில்லை.   ஆனால் தனது ஆசிச் செய்தியையும் அனுப்பிவைத்திருந்தமையும் அதனை அதிபர்கள் நிகழ்வுகளில் வாசித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   அப்படியானால் ஒரு முதலமைச்சருக்கு தனது மாகாணத்தில் என்ன நடக்கின்றது என்பதே தெரியாமல் அவர் இருக்கின்றாரா? என்ற கேள்வி எனக்கு எழுகின்றது.

மேலும் அவருடைய இந்த கருத்திற்கு முக்கிய காரணம் கடைசியாக கடந்த 03.02.2016 அன்று மாலை இடம் பெற்ற ஒட்டமாவடி தேசிய பாடசாலையின் திறப்பு விழாவாகும்.

இந்த நிகழ்வில் என்னை பங்குபற்ற வேண்டாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் இசட்.ஏ. நசீர் அஹமட் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார்.

அவர் அதற்கு சில அரசியல் காரணங்களை கூறினார்.  ஆனால் என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் போய் விட்டது.  காரணம் குறித்த பாடசாலையில் அதிபர் உட்பட அந்த பாடசாலையின் நிர்வாகத்தினரும் இணைந்து ஒரு நிகழ்வை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

அவ்வாறன ஒரு நிலையில் நான் அங்கு செல்லாமல் விட்டால் அது அந்த மாணவர்களின் மன நிலையை பெரிதும் பாதிக்கப்படும்.  அது மட்டுமல்லாமல் அந்த ஆய்வு கூடத்தின் பலன்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்படும்.

எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டும் அந்த பாடசாலையின் பழைய மாணவரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி என்னை தனிப்பட்ட முறையில் அங்கு அழைத்திருந்தார்.  எனவே இவ்வாறன் ஒரு நிலையில் நான் கலந்து கொள்ளாமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயமானது என எனக்கு புரியவில்லை.

அது மட்டுமல்லாமல் அது ஒரு தேசிய பாடசாலை அந்த பாடசாலைக்கு எமது அமைச்சின் மூலமாக ஓரு கோடியே 95 இலட்சம் ரூபா கடந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் குறித்த பாடசாலையின் 100 வது  ஆண்டு நிறைவு விழா மிக விரைவில் நடைபெறவுள்ளது.  அதற்கான ஒரு கலந்துரையாடல் ஒன்றும் அந்த பாடசாலை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இப்படி பல நிகழ்வுகள் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நான் அங்கு விஜயம் செய்த காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல மாகாண பாடசாலைகளையும் பார்வையிட்டேன்.  இது தொடர்பாக நான் எமது பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றையும் செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன்.

மேலும் நான் அங்கு கிழக்கு மாகாணத்தில் வந்து ஒரு பொழுதும் அரசியல் செய்யும் என்னமும் எனக்கு இல்லை.  நாங்கள் எல்லோரும் ஒரு மொழியை பேசுகின்றவர்கள் நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.  அப்படி செய்தால் மாத்திரமே நமது சமூகத்தின் வளர்ச்சிக்காக நாம் சேவை செய்ய முடியும்.

என்னை பொறுத்த வரை நான் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் அக்கீமுடனும் அதேபோல அமைச்சு றிசாட்பதூர்தினுடனும் பிரதி அமைச்சருமான அமீர் அலிவுடனும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களுடனும் நாடாளுமன்ற மற்றும் மாகான சபை உறுப்பினர்களுடனும் ஒரு சுமுகமான உறவை கொண்டவன் என்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவதானது எமது இரண்டு சமூகங்களுக்கும் இடையில் தேவையற்ற விடயங்களை உருவாக்கும்.

எனவே மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும் சிறுபான்மை மக்கள் என்ற வகையிலும் நாம் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிட வேண்டும்.

நான் வட மாகானத்திற்கு இவ்வாறான செயற்பாடுகளுக்குச் செல்லும் போது அங்குள்ள முதலமைச்சர் எதனையும் கூறுவதில்லை அதேபோல் தான் ஏனைய மாகான பெருபான்மை முதலமைச்சர்களும் எதையும் கூறிவதில்லை.

இதனை கிழக்கு மாகான முதல் அமைச்சர் புறிந்துக் கொள்ள வேண்டும். நான் கிழக்கு வருகை தந்தது அவரது அதிகாரத்தை பிடுங்குவதற்கு அல்ல.   உதவியாக மாகாண கல்விக்கு அபிவிருத்திக்கு உதவவே.

மாகாண கல்வி அபிவிருத்தி பெரும் பட்சத்தில் அது அவருக்கே சிறந்தது.   உதவ வந்தனை தூற்றுவது எந்தளவுக்கு ஞாயமானது என அவறது மனசாட்சியை ஒரு முறை அவர் தட்டி பார்ப்பது கட்டாயமானதாகும்.

எமது நிர்வாகத்தின் கீழ் வருகின்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்த ஒரு தேசிய பாடசாலையின் நிகழ்வுகளுக்கும் நீங்கள் சென்று வரலாம் அதில் எந்த தடையும் இல்லை.   எந்த திறப்பு விழாக்களிலும் நீங்கள் கலந்து கொள்ளலாம்.   எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

எனவே நாங்கள் எமது அரசியலை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு மாணவர்களின் நலன் கருதி செயற்படுவதே சிறப்பாக இருக்கும். நான் இந்த விடயத்தை எனது உரையில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

எனவே எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை கிழக்கு மாகாண முதலமைச்சர் தவிர்த்துக் கொள்வார் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.