“எதிர் நீச்சல்” மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிருவாகத் தெரிவும்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றதோடு நடப்பாண்டிற்கான செயற் திட்டத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மட்டக்ளப்பு இந்து இளைஞர் கட்டிடத் தொகுதியின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை 19.02.2016 இந்நிகழ்வு இடம்பெற்றது.

2016 நடப்பாண்டிற்காற்கான புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்ற போது பழைய நிருவாகத்தினரே ஏக மனதாக இவ்வாண்டிற்கான நிருவாகத்திற்கும் சபையோரால் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அதன் பிரகாரம் தலைவர் கே. பிரபாகரன், உப தலைவர் எம். சிவானந்தன், செயலாளர் கே. அருணன், உப செயலாளர் கே. குகேந்திரன், பொருளாளர் வி. மேரி மெற்றில்டா ஆகியோருடன் 24 பேர் கொண்ட நிருவாக சபைத் தெரிவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி, மாவட்டச் செயலக சமூக சேவை உத்தியோகத்தர் வி. செல்வநாயகம், மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர் பி. கலாதேவன், சமூக சேவைத் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ். கலைவாணி, பி. புஸ்பவேணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குடிநீர் வசதியற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் குடிநீர் வசதி பெற்றுக் கொடுத்தல், இவ்வாண்டிற்குள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிக் குடும்பங்களையும் கணக்கெடுப்புச் செய்து அவர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருதல், மாற்றுத் திறனாளிக் குடும்பங்கள் அனைவருக்கும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தகைமை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்களும் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.