மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைத் தெரிந்து கொள்ளாதவராக கல்வி ராஜாங்க அமைச்சர் செயற்படுகிறார் - கிழக்கு மாகாண முதலமைச்சர்

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அறிந்து கொள்ளாதவராக கல்வி ராஜாங்க அமைச்சர் ராதா கிருஷ்ணன் செயற்படுவது கவலையளிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியுதவியுடன் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 180 பயனாளிகளுக்கு சுமார் 42 இலட்ச ரூபாய் பெறுமதியான சுயதொழிலுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை ஏறாவூர் நகர பிரதேச செயலளார் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

மாகாண சபை நிருவாகத்தின் கீழுள்ள பாடசாலைகளைத் திறப்பதற்காக மலையகத்திலிருந்து கிழக்குக்கு வந்து மாகாண சபை அதிகாரங்களுக்கு சவால் விடும் முகமாக மாகாண சபைகளுக்கு பரவலாக்கம் செய்யப்பட்ட அதிகாரங்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் ராஜாங்க அமைச்சர் ராதா கிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.

என்னென்ன அதிகாரங்கள் மாகாண சபைகளுக்குள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளாத ஒரு கல்வி ராஜாங்க அமைச்சராக ராதாகிருஷ்ணன் இருப்பதையிட்டு நாம் வெட்கமும் வேதனையும்  அடைய வேண்டியுள்ளது.

இதுபோன்ற மத்திய அமைச்சர்கள் மாகாண சபைகளை குறைத்து மதிப்பிடும் போக்கிரித் தனமான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
அவரும் முன்னர் ஒரு மாகாண அமைச்சராக இருந்து மாகாண சபைகளின் அதிகாரங்களைத் தெரிந்து கொள்ளாத ஒருவராக இப்பொழுது நாடாளுமன்றம் சென்று இராஜாங்க அமைச்சராக வலம் வருகின்றார்.இப்படிப்பட்டவர்கள் மாகாண சபைகளை குறை மதிப்பீடு செய்வதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

மாகாண சபைகளின் அதிகாரங்களை இன்னும் கூடுதலாகப் பெறுவதற்கு சிறுபான்மையினரான நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற வேளையிலே மாகாண சபைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட அதிகாரங்களை எவரும் சவால் விட்டு பறித்தெடுக்கின்ற நிலைமைக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

அரசும், சர்வதேச நாடுகளும் அதிகாரப் பகிர்ந்தளிப்பு இடம்பெற வேண்டும் என்று ஊக்கமளித்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே இவ்வாறான கபடத்தனமான நடவடிக்கைகளை நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
கடந்த அரசாங்கத்தாலே கொண்டு வரப்பட்ட வாழ்வின் எழுச்சி போன்ற திட்டங்களால் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

இப்பொழுதும் அவ்வாறான நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.
600 பாடசாலைகள் திட்டத்திலே முழு அதிகாரங்களைக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு அவை வழங்கப்படாமல் மத்திய அமைச்சு மாத்திரம் அதனைக் கையாளும் வழிவகைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வெறுமனே அதிகாரப் பகிர்வு என்று வார்த்தைகளால் கூறிக் கொண்டு நிதி ஒதுக்கீடுகளை மாகாண சபைக்குத் தராமல் முடக்கிக் கொண்டு அரசியல் செய்யும் கபடத் தனம் இருக்கின்ற வரையிலும் இது உண்மையான இதய சுத்தியுள்ள அதிகாரப் பகிர்வாக இருக்க முடியாது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான, கிட்டத்தட்ட 36 ஆயிரம் மில்லியன் ரூபாவை மத்திய அரசுக்குள் வைத்துக் கொண்டு வெறுமனே 400 மில்லியன் ரூபாய்களை மாத்திரம் உள்ளுராட்சி சபைகளுக்கு கையளித்து விட்டு 99 சதவீதமான அதிகாரங்களை உள்ளுராட்சி சபைகளுக்குக் கொடுத்து விட்டோம் என்று கூறுவது ஒரு ஏமாற்று வித்தையாகும் என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலளார் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, பிரதேச செயலக வாழ்வின் எழுச்சித் தலைமையக முகாமையாளர் எம்.ஐ.எம். இஷ்ஹாக், திட்ட முகாமையாளர் எம்.ஐ.எம். றுமைஷ் உட்பட பிரதேச செயலக அதிகாரிகளும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.