தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும் -சட்டத்தரணி ஐங்கரன்

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பில் சிங்கள மக்களை தெளிவுபடுத்தும் பணிகள் பரந்தளவில் மேற்கொள்ளப்படவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் வல்லுனர்கள் சங்கத்தின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கே.ஐங்கரன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் மக்கள் கருத்தறியும் திட்டத்திற்கு இணைவாக மக்களை அறிவுறுத்தும் பணிகள் அரசார்பற்ற நிறுவனங்களினால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அரசியல் சீர்திருத்த யாப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் இணையம் மற்றும் எகட் கரித்தாஸ் ஆகியன இணைந்து டைகொனியா அமைப்பின் நிதியுதவியுடன் இந்த நிகழ்வினை நடாத்தியது.

மட்டக்களப்பு மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் செயலாளா எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பெண் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி கே.ஐங்கரன்,

இன்று சிங்கள மக்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.இந்த நாட்டில் அரசியலமைப்பு ஒன்றினை நிறைவேற்றவேண்டுமானால் அதற்கு சிங்கள மக்களின் ஆதரவு மிக முக்கியமாகும்.

கடந்த காலத்தில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதற்காக போராடினார்கள் என்ற நியாயத்தன்மை சிங்கள மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்படவேண்டும்.தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும்.

இந்த நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியக்கொடியில் மாற்றம்கொண்டுவரப்பட்டது.இன்று தமிழ் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மாற்றம்கொண்டுவரப்பட்டது.இரண்டு மாற்றங்களும் வேறு வேறு திசையில் வந்தன.அன்று தேசிய கொடியில் மாற்றம்கொண்டுவரப்பட்டு இனவாதம் புதைக்கப்பட்டது.இன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு இன ஐக்கியம் உணர்த்தப்பட்டுள்ளது.

பிடிவாதமுள்ள சிங்கள மக்கள் மத்தியில் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த ஆண்டு தேசிய சுதந்திர தின நிகழ்வில் இலங்கையின் வரலாற்றில் சிங்கள தேசிய தலைவர் ஒருவர் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏற்றுக்கொண்டுள்ளார்.2009ஆம் ஆண்டு கொடூர யுத்தம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக கூறி அவர் அதனை ஏற்றுக்கொண்டார்.ஆனால் இது மிகப்பெரும் விடயமாக கருதப்படும்போது அன்று ஊடகங்கள் இந்த கருத்து தொடர்பில் முக்கியத்துவமளிக்கவில்லை.