உணவு விசமானதில் 15பேர் பாதிப்பு-காத்தான்குடியில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் உணவு ஒவ்வாமையினால் தீடீர் சுகயீனமுற்ற 15 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று(19.2.2016) வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள சாப்பாட்டுக்கடையொன்றில் சமைக்கப்பட்ட பகலுணவை உட்கொண்டவர்களே இவ்வாறு தீடீர் சுகயீனமுற்றுள்ளனர்.

இன்று(20.2.2016) சனிக்கிழமை காலை தொடக்கம் திடீர் சுகயீனமுற்ற இவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வந்ததாகவும் இவ்வாறு 25 பேர் இதுவரை வந்துள்ளதாகவும் அதில் 15பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதுடன் ஏனையோர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

வயிற்றோட்டம், வாந்தி மற்றும் காய்ச்சல் மயக்கம் போன்ற நோய்கள் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் மேலும் குறிப்பிட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 7 ஆண்களும்,5 பெண்களும் 3 சிறுவர்களுமாகும்.

குறித்த பகலுணவை தயாரித்து விற்பணை செய்த காத்தான்குடி கடற்கரைவீதியிலுள்ள உணவு விற்பணை நிலையத்திற்கு சென்று அங்கு ஆரம்பக் கட்ட விசாரணைகளை நடாத்தியதுடன் உடனடியாக அந்த சாப்பாட்டு விற்பணை நிலையத்தினை மூடியுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

அத் தோடு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இங்கு விசாரணைகளை மேற்கொண்டதுடன் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.
இந்த உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் விசாரணை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்த சாப்பாட்டு விற்பணை நிலையத்தில் புர்யாணி சமைக்கப்பட்ட பகலுணவை இவர்கள் உட்கொண்டுள்ளதாகவும் அது ஒவ்வாமையினாலேயே இந்த திடீர்; சுகயீனம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.