பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா விடுத்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின்  முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா  எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ,இராணுவ புலனாய்வுத்துறையினை சேர்ந்த எம்.கலீல் ஆகியோரே ஏனைய சந்தேக நபர்களாவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்  2005 ம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக  விசாரனைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்களான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) மற்றும் ரெங்கசாமி கனகநாயகம் (கஜன் மாமா) ஆகியோர்  கடந்த அக்டோபர் மாதம் 8ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனா.

அதனைத்தொடர்ந்து இந்த வருட ஆரம்பத்தில் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான கலீல் கைதுசெய்யப்பட்டிருந்தார்.