நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர் நியமனங்களை வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி மாவிளங்குதுறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிரந்தர அதிபர் மற்றும் ஆங்கில ஆசிரியர் நியமனத்தினை வலியுறுத்தியும் பாடசாலையினை அபிவிருத்திசெய்யுமாறு கோரியும் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

தரம் ஒன்று தொடக்கம் தரம் ஒன்பது வரைக்கும் உள்ள குறித்த பாடசாலையில் கடந்த 2015.01.08 திகதி தொடக்கம் நிரந்தர அதிபர் இன்மையினால் தற்காலிகமாக குறித்த பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிய ஆசிரியரை பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பாக நியமித்ததன் காரணமாக இப்பாடசாலையில் அதிபர் மற்றும் ஆங்கில ஆசிரியருக்கான வெற்றிடம் கடந்த ஒருவருடமாக நிலவி வருகின்றது.

இதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும் குறித்த பாடசாலையின் நலனில் அக்கறை கொண்ட கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் ,மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தினர் அனைவருமாக இணைந்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வரலாற்று ரீதியான கிராமமான மாவிலங்குதுறை கிராமம் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளினால் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தரம் ஒன்பது வரையில் மட்டுமே குறித்த பாடசாலை இருப்பதன் காரணமாக ஒன்பதாம் தரத்திற்கு பின்னர் வேறு பகுதிகளுக்கு நீண்ட தூரம் பாடசாலைக்கு செல்லவேண்டியதன் காரணமாக சிலர் ஒன்பதாம் தரத்துடன் பாடசாலைக்கு செல்லாமல் விடுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே தமது நிலைமையினை கருத்தில் கொண்டு ஆசிரியர் நியமனம் மற்றும் அதிபர் நியமனங்களுடன் பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை தீர்த்துவைக்க உரிய அதிகாரிகள்,அரசியல் வாதிகள் முன்வரவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

குறித்த விடயத்தினை அறிந்து அங்கு வருகைதந்த வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இரண்டு வெற்றிடங்களும் நிரப்பப்படும் எனும் வாக்குறுதிக்கு அமைவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டிருந்தனர்.