டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக 41 இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 19 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

(லியோன்)



தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

 இலங்கையில் டெங்கு  நோய் பெருக்கத்தில்  அதிகமாகவுள்ள மாவட்டங்களில்   நான்காவது  இடத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக டெங்கு தாக்கம் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள  மட்டக்களப்பு மாநகரசபை  பகுதிகளில்  தெரிவு செய்யப்பட கிராம சேவகர் பிரிவுகளான ஜெயந்திபுரம் , இருதயபுரம் ,மாமாங்கம் , கூழாவடி , புளியந்தீவு  ஆகிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுகளிலும்   11ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு  பிராந்திய  பொது சுகாதார மேற்பார்வை   பரிசோதகர் .  கே . ஜெயரஞ்சன்  தெரிவித்தார்.

மாவட்டத்தின் பிரதான டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் ஆரம்பிக்கப்பட்டதுடன், தொடர்ந்து  மூன்று  நாட்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் தேசிய டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்றைய தினம் சுமார் 1013 இடங்கள் சோதனையிடப்பட்டன . இதில் டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக  41  இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் இதில் 22 எச்சரிக்கை அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன்   மற்றும் 19 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ,  விஷேட அதிரடிப்படையினர் , பொலிஸ் உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.