இளைஞர் யுவதிகளுக்கான முன்பிள்ளை பருவ அபிவிருத்தி தொடர்பான தெளிவூட்டும் விழிப்புணர்வு கருத்தரங்கு

(லியோன்)


தேசிய முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான முன்பிள்ளை பருவ அபிவிருத்தி தொடர்பான தெளிவூட்டும் விழிப்புணர்வு கருத்தரங்கு  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி . தவராஜா தலைமையில் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில்  தற்போதைய சமுதாயத்தில் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன

அந்த பிரச்சினைகள் கருவில் இருக்கின்ற குழந்தையில்  இருந்து முதியவர் வரை பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இருக்கின்றது  .

இதனை  சமுதாயத்தில் உள்ள  ஒவ்வொருவரும் எவ்வாறு  சீர் செய்யலாம் என்பது  தொடர்பாக  அரசாங்கம் பல்வேறு பட்ட செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது .

அந்த வகையில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை  அனுஷ்டிப்பதன்  ஊடாக  சமுதாயத்தில் இளைஞர்கள் , வளந்தவர்கள் , தாய்மார்கள் ,குழந்தைகள் மத்தியில் முன்பிள்ளை பருவம் என்பது என்ன , அதை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக  விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது .

அந்த வகையில் குடும்ப வாழ்க்கையில் இணைய இருக்கின்றவர்கள் , குடும்பத்தோடு ஒன்றாய் வாழ்கின்றவர்கள் இந்த முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியிலே இளைஞர் யுவதிகளை எவ்வாறு இணைத்துக்கொள்ளலாம்  என்பது தொடர்பாக விழிப்புணர்வுகளை  ஏற்படுத்தும் நோக்கில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு  தெளிவூட்டும் கருத்தரங்காக    இன்று  இந்த  கருத்தரங்கு  இடம்பெறுவதாக தெரிவித்தார் .


இந்நிகழ்வில்  வளவாளராக  முன்பிள்ளை  பருவ அபிவிருத்தி உதவி கல்வி பணிப்பாளர்  எம் .புவிராஜ்  கலந்துகொண்டதுடன்  இந்நிகழ்வில்    மண்முனை வடக்கு  முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்  மேகராஜ்  , மண்முனை வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்  எஸ் . உதயராஜ் , மண்முனை வடக்கு இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திருமதி .பி .பிரியதர்சினி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலைக  இளைஞர் சேவைகள் மன்ற அங்கத்துவ இளைஞர் ,யுவதிகள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .