மட்டக்களப்பு அபிவிருத்திக்குழு தலைவராக ஸ்ரீநேசனை நியமிக்குமாறு துறைநீலாவணை தமிழரசுக்கட்சி கிளை வேண்டுகோள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அதிக வாக்குகளைப்பெற்ற ஞா.சிறிநேசனுக்கு வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு,துறைநீலாவணை தமிழரசுக்கட்சி கிளையினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிரசுக்கட்சியின் துறைநீலாவணை வடக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் கே.விஜயரதன் தலைமையில் துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலய முன்றிலில் நேற்று சனிக்கிழமை மாலை தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பெருமளவான தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ள ஞா.சிறிநேசனை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக நியமிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மகஜர் ஜனாதிபதி மற்றம் பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த தமிரசுக்கட்சியின் துறைநீலாவணை வடக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் கே.விஜயரதன் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தின்போது எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதற்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் துறைநீலாவணை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இன்னும் புனரமைக்கப்படாது உள்ள துறைநீலாவனை பிரதான வீதியின் புனரமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.