ஊனமுற்ற மகனை குத்திக்கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலைசெய்த தந்தை –வவுணதீவில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்திச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட தேவையுடைய மகனை குத்திக்கொலைசெய்துவிட்டு தகப்பனும் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பருத்திச்சேனையை சேர்ந்த தாமோதரம் மகேந்திரன்(30வயது) அவரது மகனான 07வயதுடைய வினோஜன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது மகனும் கணவனும் உயிரிழந்துள்ளதை கண்ட தாயார் கிணற்றில் பாய்ந்து தற்கொலைசெய்ய முயன்ற நிலையில் அருகில் இருந்தவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் வீட்டில் மகனும் தந்தையும் இருந்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த விசேட தேவையுடைய தனது மகனின் கழுத்துப்பகுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்திக்கொலைசெய்த தந்தை தனது அறைக்கு சென்று கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் நான்கு மாத குழந்தையுடன் வெளியில் சென்றிருந்த உயிரிழந்தவரின் மனைவி தனது மகன் உயிரிழந்து கிடப்பதையும் கணவர் தூக்கில் தொங்குவதையும் கண்டு அழுதவாறு சென்ற தனது மாமனாரின் வீட்டில் உள்ள கிணறில் நான்கு மாத குழந்தையுடன் பாய்ந்து தற்கொலைசெய்ய முயன்றுள்ளார்.

இந்த நிலையில் அருகில் இருந்தவர்களினால் குறித்த தாயும் பிள்ளையும் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா சடலங்களை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணித்தார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் வவுணதீpவு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.நசீரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த சம்பவத்தினை கேள்வியுற்றதும் பெருமளவான பொதுமக்கள் அப்பகுதியில் குழுமியுள்ளதையும் காணமுடிகின்றது.