நீதிமன்ற கட்டளையினை அவமதித்து நுழைந்ததன் காரணமாகவே தாக்கமுற்பட்டேன் -காணி உரிமையாளர் தெரிவிப்பு

தமக்கு சொந்தமான காணிகளுக்குள் நீதிமன்ற கட்டளையினை அவமதித்து அத்துமீறி நுழைந்ததன் காரணமாகவே மண்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களை தான் தாக்கமுற்பட்டதாக சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் உள்ள காணியின் உரிமையாளர் தெரிவித்தார்.


கடந்த 05ஆம் திகதி எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த “பிள்ளையாரடியில் அத்துமீறிய காணி தொடர்பில் விசாரணைசெய்ய சென்றவர்களுக்கு பொலிஸார் முன்னிலையில் மிரட்டல்”என்னும் தலைப்பில் வெளியான செய்தி தொடர்பில் தனது விளக்கத்தினை அளித்துள்ளார்.

90வருடத்துக்கு மேல் அதற்கான காணி உறுதியுள்ளது.அவற்றினை அரசகாணியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகம் அடையாளப்படுத்தியதாக தெரிவித்துள்ளபோதிலும் அரச காணிக்கான ஆதாரங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

இது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டபோதிலும் குறித்த வழக்கு எனக்கு சாதகமாக முடிந்துள்ளதுடன் காணி உரிமையாளர் நான் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் எனது காணிக்குள் நுழைந்து சட்டத்திற்கு முரணாண வகையிலும் நீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் வகையில் எங்களை வெளியேறுமாறு கோரினர்.

இதன்காரணமாகவே எனது காணியினை பாதுகாக்கும் வகையில் நான் பொல்லை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.ஒருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைவது சட்ட விரோதம் என்பதை குறித்த அதிகாரிகள் அறியவில்லையா எனவும் அவர் தெரிவித்தார்.