தமிழ் பெண்களின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்தவேண்டிய காலமாக மாறிவருகின்றது –பொன்.செல்வராசா எம்.பி.

வடகிழக்கு மாகாணத்தில் தமிழ் பெண்களின் பாதுகாப்பினையும் சுதந்திரத்தினையும் உறுதிப்படுத்தும் மிக முக்கியத்துவம் மிக்க காலமாக இன்றைய காலம் மாறிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவின் படுகொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோர் மீது எதுவித ஈவிரக்கமும் காட்டாது நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை விட இன்றைய சூழ்நிலையில் வன்முறைகள் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.

இவ்வாறான சூழ்நிலை எமது சமூகத்தின் எதிர்கால செயற்பாடுகளை வெகுவாக பாதிக்ககும் நிலையினை ஏற்படுத்தும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் எங்களது செயற்பாடுகள் இன்னுமொரு மாணவிக்கு இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருக்கவேண்டுமே ஒழிய அது சமூகத்தின் செயற்பாடுகளை பாதிப்பதாக இருக்க கூடாது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

நாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் சமூகத்துக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டுமே தவிர பாதிப்பனை ஏற்படுத்தக்கூடாததாக இருக்கவேண்டும்.இவ்வாறான சூழ்நிலையில் சிலர் தங்களது செயற்பாடுகளை காட்டமுற்படுவது நிரூபனமாகியுள்ளது.

இந்தவேளையில் அனைவரும் விழிப்புடண் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தமிpழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது.