களுவாஞ்சிகுடியில் நீண்டகாலமாக பஸ் தரிப்பு நிலையம் இல்லாத குறை நீக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்திய பிரதேசமாகவும் முக்கியத்துவம் மிக்க நகரமாகவும் வழங்கும் களுவாஞ்சிகுடி நகரில் நீண்டகாலமாக நிலவிவந்த பஸ் நிலையம் இல்லாத குறை நீக்கப்பட்டுள்ளது.


களுவாஞ்சிகுடி கிழக்கு மாகாணத்துக்கும் கொழும்பு மற்றும் வட மாகாணத்துக்கான பிரதான நகரமாகவும் விளங்கிவருகின்றது.அத்துடன் எழுவான்கரைக்கும் படுவான்கரைக்கும் இணைப்பு நகரமாகவும் திகழ்கின்றது.

என்னும் இங்கு பஸ் நிலையம் தற்காலிக கொட்டகையிலேயே செயற்பட்டுவருவதுடன் மழை காலத்தில் அதில் கடமையாற்ற முடியாத நிலையினையும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எதிர்நோக்கிவந்தனர்.

அத்துடன் மழை வெயில் காலங்களில் பஸ்ஸுக்காக காத்திருக்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்ததுடன் மரம் நிழல்களையும் வர்த்தக நிலையங்களையுமே நாடவேண்டிய நிலையிருந்துவந்தது.

களுவாஞ்சிகுடி பிரதேசத்திலேயே பிரதான அலுவலகங்கள் இருந்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர்.

இந்த நிலையில் பிரதேசத்தில் பஸ் நிலையம் ஒன்று அமைப்பதற்கான கோரிக்கைகள் கடந்த காலத்தில் விடுக்கப்பட்ட நிலையில் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்துவந்தது.

இந்த நிலையில் அண்மையில் இப்பகுதிக்கு வருகைதந்த சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து தற்போது பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதலாவது கட்டமாக 30இலட்சம் ரூபா பிரதியமைச்சரினால் ஒதுக்கீடுசெய்யப்பட்டு அவற்றின் கட்டுமாணப்பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம்,மண்முனைப்பற்று தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி வசந்தராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பஸ் நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் இப்பிரதேசத்தின் மாணவர்கள்,பொதுமக்கள் பெரும் நன்மையடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.