சம்பூருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விஜயம் -மீள்குடியேற்ற பகுதிகளையும் பார்வையிட்டார்

திருகோணமலை சம்பூர் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.


நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கிழக்குமாகாண கல்வியமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சருமான தண்டாயுதபாணி அவர்களுடன் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சம்பூர் மக்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

நீதிமன்ற தடை நீக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்ற மக்களின் செயற்பாகளை அறியும் வகையில் இந்த விஜயத்தினை மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை சம்பூர் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மீள் குடியேறிவரும் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வியமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சருமான வி.தண்டாயுதபாணி தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உதவி பிரதம செயலாளர் தலைமையில் 12 அங்கத்தவர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவானது நாளை; திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சருமான வி.தண்டாயுதபாணி  சம்பூர் கிராமத்திற்கு விஜயம் செய்து அங்கு மீள் குடியேறிவரும் மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்களை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.