புலம்பெயர் ஊடகங்களின் நோக்கம் மக்கள் நலனா?

ஊடகங்கள் என்பவை எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற வரையறைகள் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு நடத்திவரும் அநாமதேயமான இணையத்தளங்களால் மீறப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் மக்களை பிழையான சிந்தனைகளுக்கும் தவறான செயற்பாடுகளுக்குமே இட்டுச் செல்லும்.

நாட்டைவிட்டுச் சென்றுள்வர்களின் இலகுவான உழைப்புத் தொழிலாக மாறிவரும் இணையத்தளங்களால் பல்வேறுபட்ட மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் பாழாகிப் போய்க் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகளுக்குச்  செலவு செய்யப்படும் பணம் , மக்களுக்காகச் செலவிடப்பட்டால் நமது மக்கள் எவ்வளவோ அபிவிருத்திகளைக் கண்டுவிடுவார்கள் என்று பலரையும் சிந்திக்க வைப்பதாக அமைகிறது.

தொடர்ச்சியாக யாரையும் சட்டை செய்யமாது செயற்படும் புலம் பெயர்ந்து வாழுகின்ற பலர் நாட்டில் என்ன நடக்கிறது என்றோ, பிரதேசங்களில் எவ்வாறான தேவைகள் இருக்கிறது என்றோ தெரியாது செயற்படுகிறார்கள் என்பது அவர்களது எழுத்துக்களில் இருந்து புரிகிறது.

யுத்தம் முடிந்து கடந்த 7வருடங்களில் இலங்கையின் பல பகுதிகளும் மாற்றம் கண்டுள்ளன. அதிலும் மட்டக்களப்பு மாவட்டமானது மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதுடன், அதனைச் செய்து வருகிற யாரையும் யாருக்கும் பிடிப்பதில்லை.

அடிப்படையில் அடுத்தவர்களது தகவல்களை  வெளிக் கொண்ர்வதாக எண்ணிக் கொண்டு சாதாரண மக்களுக்குக் கிடைக்கும் ஒரு சில  வசதிகளைக் கூட வீணாண விதண்டாவாதச் செயற்பாடுகளால் இல்லாமல் செய்கின்ற போக்கு பலரது பிழைப்பாகி விட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மாவட்டத்தின் 90 வீதமான பகுதிகளைப் பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. இந்த வெள்ளப்பாதிப்பில் இருந்து யாருடைய உயிரும் போய் விடாது, மக்கள் சிரமப்பட்டு விடாது, நோய்கள் பரவாது மாவட்டம் மிகவும் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது பல உயிர்கள் பலியாகியிருந்தன.இந்த வருடத்தில் அது நடைபெறாது தடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

படித்தவர்களுக்கும், சாதாரண அனுபவ அறிவுள்ளவர்களுக்கும் வித்தியாசம் இருக்கும். அதே போன்று படித்த அனுபவமுள்ளவர்களுக்கும் வித்தியாசம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றில்லை.
அதே போன்று முடிவுகளை எடுக்கின்ற போதும் இந்த 3 பிரிவினருக்கும் வித்தியாசம் இருக்கும். எந்த ஒரு விடயத்தினையும் அப்போதைக்கு மட்டும் என்று யோசிப்பவர்களும் இருக்கும், நாளைக்கு என்று யோசிப்பவர்கள், அதனையும் தாண்டி ஒரு வாரம் , மாதம், வருடம், சந்ததி என்று யோசிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைக்கு என்று யோசிப்பவர்களால் தான் பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்திவிட:டுவிட்ட அரசாங்கம், இவ்வாறான வதந்திகளால் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கும் வீண் விளைவுகளுக்கும் என்ன தீர்வை வைக்கப்போகின்றது என்பது இப்போதைய முக்கிய கேள்வியாக இருக்கிறது.

அனேகமாக தமிழில் செயற்படும் வெளிநாடுகளில் இருந்து அநாமதேயமாக வந்து கொண்டிருக்கும் ஊடகங்கள் உலக நாடுகள் அனைத்திலும் இருப்பவர்களது பணத்தினைச் சுரண்டும் ஒன்றாகவே மாறி இருக்கிறது. இதனைப் புரிந்து கொள்ளாத பெருந்தொகையானோர் இப்போதும் இந்த ஊடகங்களை நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் தான் புலம்பெயர் ஊடகங்களின் நோக்கம் மக்கள் நலனா? என்ற முக்கிய மான கேள்வி தோன்றுகின்றது. யாரோ ஒருவர் ஏதோ பொழுது போக்குக்குக்காகவும் மற்றவர்களை இழிவு படுத்துவதற்காகவும் செயற்படுத்துகின்ற இணையங்களைப் பார்த்து தம்மை சஞ்சலப்படுத்திக் கொள்ளும் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட சில  இணையத்தளங்கள் அரச அதிகாரிகளையும், மக்கள் நலன் சார்ந்து செயற்படுபவர்களையும் , வளர்ந்துவரும் வர்த்தகர்ளகையும், அவதூறாக எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடலாம். அல்லது தங்களது தளங்களை பிரபலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்வதற்கப்பால் மக்களைப் பிழையான வழிகளுக்கு இட்டுச் செல்லவும் முயல்கின்றன.

இவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்வதாக இல்லை. இருக்கின்ற அனைத்து அதிகாரிகளிலும் குறையை கண்டுபிடித்து துரத்திவிடுவதனால் எதனைச் சாதித்து விடமுடியும் என்பதுதான். ஊடகங்கள் நடைபெறுகின்ற அபிவிருத்திகளை எவ்வாறு மேம்படுத்தலாம். தவறு செய்பவரை எவ்வாறு திருத்தலாம் அவரது திறமைகளை மக்களுக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிச் சிந்திப்பவையாகவும் மேம்பாடுகளுக்காக உழைப்பவைகளாகவும் இருக்க வேண்டும். அதனால் தான் நாட்டின் நான்கவது தூணாக ஊடகத்துறை மதிக்கப்படுகிறது.

மாறாக அறிவீனமுள்ளவர்கள் போன்று தன்னுடைய சுய நலத்துக்காகவும், மன நெருக்கங்களுக்காகவுமான பிரதிபலிப்பாக அமையக்கூடாது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பற்றி தேவையான விடயங்களை விட்டுவிட்டு தேவையற்றவற்றைப் பற்றி எழுதி அதிகாரிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாக அறிய முடிகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டமானது மிகவும் அனர்த்தங்கள், அழிவுகளால் துன்பப்பட்டதாகும். இவ் மாவட்டம் இப்போது பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி கண்டு வருகிறது. இந்த அபிவிருத்திகள் யாரது கைகளுக்குள்ளால் வந்தவை என்பதற்கப்பால் எத்தனை நடந்தன. எவ்வாறு நடந்தன என்பதனைப்பற்றியே பார்க்க வேண்டும்.

நம்மைப்போன்று வெளிநாடுகளிலுள்ளவர்களால் இயங்கும் ஊடகங்கள் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதுடன் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை வெளிக் கொணருபவையாகவும் இருக்க வேண்டும். அத்துடன், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.

ஒரு ஊடகமானது குற்றச் சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டால் யார்மீதாக இருந்தாலும், அதன் அடுத்த பக்கத்தைக் கேட்டாகவேண்டும். வெளியிட்டாகவேண்டும் ஆனால் தற்போதய சூழலில் யார் ஊடகங்களுக்குள் வரலாம் என்ற வரையறைகளே இல்லாமல் Nhபய்விட்டன. இந்த நிலைமைகளில் மாற்றங்கள் தேவையாகும்.

வெறுமனே வதந்திகளையும், தனிப்பட்ட விரோதங்களையும் ஒன்றுமில்லாத கருத்துக்களையும் வெளியிடுவதைத் தவிர்த்து சிறந்த ஊடகக் கலாசாரம் ஒன்று இலங்கையிலும் உலகளவிலும் உருவாக வழி செய்ய வேண்டும்.
எனவே தட்டச்சு செய்தவதற்கும் கணணியினை இயக்குவதற்கும் தெரிந்தால் போதும் என்ற நிலை மாறி புலம் பெயர் ஊடகங்கள் ஊடக தர்மம் குறித்தும், மக்கள் நலன் சார்ந்தும் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தினையும் இவை பயன்படுத்தப்படாவிட்டால் வீணான பிரச்சினைகளுடைய சமுதாயங்களையே இவை உருவாக்கிவிடும்.

அதே நேரம், முன்னாள் போராளிகள் என்று செல்லிக் கொள்பவர்களும்,  விடுதலைப்புலிகளின் இயக்கத்துடன் முன்பு தொடர்பிலிருந்தவர்களும், தமக்கிருக்கும் வாய்ப்புக்களைப் பெற்றவர்களும்  தற்போது புனைபெயர்களின் இணையங்களைப்பிழையாகப் பாவித்துச் செய்யும் அட்டூழியங்கள் மிகவும் தவறானது என்பது  நம்போன்ற புலம்பெயர்ந்தவர்களுக்கும் புரியவேண்டும்.

சத்தியானந்தன் லண்டன்