காத்தான்குடியில் கேரளக்கஞ்சா மீட்பு – ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் உள்ள முதியோர் இல்ல வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அதனை தம் வசம் வைத்திருந்த குடும்பஸ்தரும் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.


புதிய காத்தான்குடி – றிஸ்வி நகர், முதியோர் இல்ல வீதியைச் சேர்ந்த அலியார் தாஜுதீன் என்ற 47 வயதான குடும்பஸ்தரிடமிருந்து இலங்கை நாணயப்படி சுமார் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க  150 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

தமக்குக் கிடைத்த துப்புத் தகவலின் படி குறித்த வீட்டை தீடீர் சோதனையிட்ட போதைவஸ்துத் தடுப்பு புலனாய்வுப் பொலிஸார் மேற்படி அளவுடைய கஞ்சாவையும் அதனை வைத்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

நேற்று முன் தினமும் புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த ஆதம்லெப்பை முஹம்மத் ஆஷிக் என்ற 27 வயதான இளைஞனிடமிருந்து இலங்கை நாணயப்படி சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 180 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.