ஆலயங்களை வழிநடத்தும் நூல் வெளியீடும்,கலந்துரையாடலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் இந்துசமய ஆலயங்களின் பரிபாலனத்திற்கான வழிகாட்டி கைநூல் வெளியீடும் இன்று நடைபெற்றது.


இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு,கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரட்னம்,வெல்லவெளி பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம், பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம்,வாகரை பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி உட்பட உதவி பிரதேச செயலாளர்கள்,கலாசார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் உள்ள ஆலயங்களின் நிர்வாக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது நாவற்குடா இந்துக்கலாசார நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமாரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் ஆசியுரையினை கல்லடி,காயத்திரி பீடத்தின் பிரதமகுரு சிவயோகச்செல்வன் ரி.சாம்பசிவ சிவாச்சாரியார் நிகழ்த்தினார்.

நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாளராக திருமதி வசந்தா வைத்தியநாதன் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் “இந்து ஆலயங்களும் நீதிமன்ற சட்டவரையறைகளும்” என்னும் தலைப்பில் சட்டத்தரணி எப்.விஜயகுமார் உரையாற்றினார்.

அத்துடன் “எதிர்கால சமூதாய அபிவிரு;த்தியில் இந்து ஆலயங்களின் காத்திரமான பங்கு”என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீகத்துறை தலைவர் திருமதி சாந்தி கேசவன் உரையாற்றினார்.