போலி என்று எதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதோ அதனையே இன்று செய்துவருகின்றது –பூ.பிரசாந்தன்

2015 ஜனவரிக்கு முன்னர் எதைஎல்லாம் போலி அரசியல் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சொன்னதோ அவற்றையெல்லாம் இன்று அது செய்துவருகின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.


நேற்று திங்கட்கிழமை மாலை போரதீவில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின்போதுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தரம்-1 மாணவர்களுக்கும் அரசியல் பாடம் எடுக்கும் பரிதாப நிலை மட்டக்களப்பில் தொடர்கின்றது. 2015 ஜனவரிக்கு முன்னர் பாடசாலை விழாக்களிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு யதார்த்தமாக உரை நிகழ்த்தினாலும் அதனையெட்டி பாடசாலையில் அரசியல் பேசுகிறார்கள்.ஆசிரியர்களுக்கு அரசியல் கருத்துக்களை திணிக்கின்றார்கள் என்று அறிக்கை விட்ட பல அரசியல் தமிழ் தலைவர்கள் இன்று என்ன செய்கின்றார்கள். தரம்-1 மாணவர்களின் இல்லவிளையாட்டுப் போட்டிகளிலும் மாலை 6 மணிவரை கூட்டத்தோடு சென்று அரசியல் வீரவசனம் பேசுபவர்கள் தம்மை தமிழர்களுக்காக போராடிய போராளிகளாகவே சித்தரிக்க முனைகின்றனர்.

போராட்டம் உக்கிரமாக நடைபெற்றபோது கூட எந்தவித பங்களிப்பும் செய்யாது போராட்டத்தினையும்,போராளிகளையும் விமர்சித்த இவர்கள் இதுவரைபோராட்டத்தில் களம் கண்;டு பலவெற்றிகளை பெற்றுக் கொடுத்து போராட்டம் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத்தராது என்ற ஜதார்த்தத்தினை உணர்ந்தவர்களாக ஜனநாயக ரீதியாக

அரசியலுக்கு வந்த தமிழ் மக்கள் விடுதலைபபுலிகள் கட்சியினையும் போராட்டத்தின் பரிசாக அங்கத்தில் துப்பாக்கி ரவைகளை தாங்கிநிற்கும் அதன் தலைமைகளையும்; விமர்சிக்க எந்தவகையிலும் அருகதை அற்றவர்கள்.

ஒருவிரலால் மற்றவரைசுட்டிக்காட்டும் போது ஏனைய மூன்று விரல்கள் தன்னைச் சுட்டிக் காட்டுவதை முதலில் உணர வேண்டும். 2015 ஜனவரிக்கு முன்னர் எதைஎல்லாம் போலி அரசியல் என்று சொன்னார்களோ அதையெல்லாமே இன்று அவர்களே செய்கின்றனர்.குண்டுச் சட்டிக்குள் குதிரைஓடுவதல்ல அரசியல் தாம் சார்ந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய முயல வேண்டும்.மாறாக தரம்-1 மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டியில் சென்று அரசியல் பாடம் எடுப்பதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.

மட்டக்களப்பில் அரசியல் பாடத்திற்கு ஆசிரியர் தட்டுப்பாடும் இல்லை.அத்தோடு தரம் 01 மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் அரசியல் பாடம் சேர்க்கப்படவுமில்லை கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானபாடங்களுக்கே அதிகதட்டுப்பாடுநிலவுகின்றது முடிந்தால் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாடரீதியான ஆசிரியர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொடுங்கள் வெளிநாட்டுப் பயணம் செய்வதனாலும், அரசியல் ரீதியான முக்கியபேச்சுவார்த்தை என்றாலும் ஏன் மோடியை சந்திப்பது என்றாலும் ஓரங்கட்டப்படும் மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளுக்குள் மட்டும் வீரவசனம் பேசுவதை நிறுத்தி உருப்படியாக தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் பேச்சுக்களில் தமதுகட்சிக்குள்ளேயே தமது இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காட்டிய மாகாண சபை அதிகாரத்தின் பாதையே தமிழர்களின் தீர்வு விடையத்தின் ஆரம்பப்படி என்பதனை தற்போதுதான் உணர்ந்து பயணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மக்களின் நலன் சார்ந்து ஆக்கபூர்வமாக சிந்திக்கவேண்டும்.