மட்டக்களப்பு மாவட்டத்தில் 4000 வீடுகள் அமைக்க நடவடிக்கை –அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர்

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான முதல் கட்டநிதி அனர்த்த முகாமைத்து அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 6000 குடும்பங்களுக்கு கடந்த ஆண்டு வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்டன.

கடந்த டிசம்பவம் மாதம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த 4080 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.இதற்கான முதல் கட்ட நிதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த இரண்டு வருடங்களுக்குள் பத்தாயிரம் வீடுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணித்துக்கொடுத்துள்ளது.

அதேபோன்று வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 157 மில்லியன் ரூபாவை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்கியிருந்தது. இலங்கையில் அதிகூடியதாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் மாவட்டம் அனுராதபுரம்,பொலநறுவை ஆகும்.அதனையும் தாண்டி யுத்தபாதிப்புக்கொண்ட மாவட்டம் என்ற அடிப்படையில் இந்த நிதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது தொடர்ச்சியாக பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தயார் நிலையில் உள்ளது.