கட்சியில் நன்மை அனுபவித்து பெற்றுச்சென்றவர்கள் கட்சிக்கு சேறுபூசுகின்றனர் –பூ.பிரசாந்தன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் கட்சியுடன் மிக நெருக்கமாக அதன் மூலம் பல நன்மைகளை அடைந்து விட்டு தங்களது தவறுகளை மறைக்கவே தம்மீது ஆவேசமான பேச்சுகளை சிலர் பேசுகின்றனர்.சேறு பூசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுப்பது தொடர்பில் நாங்கள் ஆலோசனை செய்துவருகின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர்ரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணிக்கூட்டம் இன்று வாவிக்கரையில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமாமகி 2008ம் வருடம் தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையே இன ஐக்கித்தினை வலுப்படுத்தியதுடன் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிலான அபிவிருத்திப் பணிகளைச் செயற்படுத்தியும் காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இளைஞர்கள் தலைநிமிர்வுடனும் மரண அச்சமின்றி சுதந்திரமாக தாம் நினைத்ததைக் கற்று உயர்பதவிகளையும், சுய தொழில்களை விரும்பிய இடத்திற்குச் சென்று மேற் கொண்டு வாழ்வதற்குமான சூழலையும், எமது பெண்கள் கண்ணீருடன் அழுது புலம்பிய நிலையையும் மாற்றி ஜனாநாயக நிலையினைத் தோற்றுவிப்பதற்கு கால்கோளிட்டது தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியேயாகும். இன்று பலர் அரசியலில் அச்சமின்றி ஜன நாயக ரீதியாக போட்டியிட முன்வருவதற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் பிரவேசமே காரணமாகும்.

அது மட்டுமன்றி தமிழர்களுக்கான ஆயுதப்போராட்டம் அழிவுகளையே பெற்றுத் தரும் அரசியல் தீர்வே நிலையானதாக அமையும் என்ற நோக்குடன் தமிழ் மக்களின் போரட்டத்திற்காக கிடைத்த குறைந்த அரசியல் தீர்வாக அமைந்தாலும் 21 வருடங்களாக தமிழ் மக்களால் நுகர முடியாது இருந்த மாகாணசபை முறைமையினை தமிழர்களுக்கான அரசியல் தீர்வின் ஆரம்பப் படிக்கல்லாக கொண்டு முன்நோக்கி நகர வேண்டும் என்ற தூரநோக்கோடு 2008இல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணசபையின் ஆளும் அதிகாரத்தினை தன்னகத்தே மக்களின் ஆணையுடன் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் எந்த அரசியல் சக்திகளுக்கும் சோரம் போகாமல் எமது தனித்துவத்துடன் இணக்க அரசியல் செய்து காட்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்தே வடக்கு மாகாணத்திலும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு வடக்கு மக்களும் மாகாணசபை அரசியல் அதிகாரத்தினை  அனுபவித்து வருகின்றார்கள். அது மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆட்சி அமைக்கலாம் அமைச்சுப்பதவிகளை பெற்று இணக்கப்பாட்டு அரசியல் செய்யலாம் என முன்வருவதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2008 இல் எடுத்த அரசியல் சாணக்கியமான முடிவு சரியானது என்பதனை வெளியுலகிற்கு பறைசாற்றுகின்றது என்றால் அது மிகையாகாது.

எமது ஆட்சிக்காலத்திலும் சரி எமது அரசியல் அதிகார நிலையிலும் சரி நாமும் எமது கட்சியின் தொண்டர்களும் யாருக்கும் எதிராக அரசியல் பழிதீர்ப்பில் ஈடுபடவில்லை அவ்வாறு நியாய பூர்வமான மாகாணசபை ஆட்சி நடத்தியவர் எமது கட்சித் தலைவர்.சி.சந்திரகாந்தன் ஆனால் அவ்வாறு பூரண ஜனநாயகரீதியான ஆட்சி நடத்தியதுடன் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேர்தல் சட்ட திட்டங்களுக்கு அமைய தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை ஒட்டுக்குழு எனவும் பிள்ளையான் குழு எனவும் எமது கட்சித் தலைவரை தகாத வார்த்தைகளால் தாக்கி அறிக்கை விடுவதணையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அவ்வாறு தமிழ் மக்கள் விதலைப் புலிகள் கட்சியின் நற் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சொற்பிரயோகங்களை தமது ஊடக அறிக்கையிலும் அங்கீகரிக்கப்பட்ட மேடைகளிலும் குறிப்பிடும் சில அரசியல் தலைமைகளுக் கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராக உள்ளோம
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனுக்கும் எதிராக மிக மோசமாக அறிக்கைவிடும் தலைமைகள் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் என்பதையும் எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்கள் மூலம் பல நன்மைகளை அடைந்து விட்டு தங்களது தவறுகளை மறைக்கவே ஆவேசமாகப் பேசுகின்றார்கள் என்பதுமே உண்மை.

அது அரசியல் நாகரீகமல்ல ஆயினும் பல மூத்த அரசியல் தலைமைகள் மிகவும் அரசியல் நாகரீகத்துடன் சொற்பிரயோகம் செய்வதனையும் சுட்டிக்காடியே ஆக வேண்டும் அத்தோடு எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உன்னதமான அரசியல் நாகரியத்தினை பின்பற்ற வேண்டும் என்பது தலைவரின் கண்டிப்பான ஆலோசனை அதனை நாம் தொடர்ந்து கடைப் பிடித்தே வருகின்றோம் எமது இளைஞர் அணி உறுப்பினர்களும் அதனை கண்டிப்பாக  கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.