முஸ்லிம் காங்கிரஸ் செய்வது கொள்கை ரீதியான அரசியல் அல்ல.அவர்கள் செய்வது அரசியல் வியாபாரம் -ஜனா

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செய்வது கொள்கைரீதியான அரசியலாகும். எமது மக்களின் உரிமைகள் பெறப்படவேண்டும் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என போராடிக்கொண்டுள்ளோம். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்வது கொள்கை ரீதியான அரசியல் அல்ல.அவர்கள் செய்வது அரசியல் வியாபாரம் ஆகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.


நேற்று மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமீன்மடு,விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த கால ஆட்சியானது தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானதொரு காட்டாட்சி, எமது இலட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்த ஆட்சி, கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்தொழித்த ஆட்சி, தமிழ்பேசும் மக்கள் இந்நாட்டின் பிரஜைகள் அல்லர் அவர்கள் எமது சேவகர்கள் என நடத்தப்பட்ட ஆட்சி வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களினால் மாற்றப்பட்டு தமிழ் மக்களுக்கு விடிவெள்ளியை தோற்றுவிக்கும் ஆட்சி இன்று உருவாகியிருக்கின்றது.

அதன் பெறுபேறாக சிறைகளில் வாழும் எமது அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு நாம் கோரியபோது அவர்களின் பெயர் விபரங்களை தரும்படி கேட்டு தற்போது பரிசீலித்துக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற எமது மக்களின் காணிகளை விடுவிக்கும்படி கேட்டபோது அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக கூறி நடவடிக்கை எடுத்துவருகின்றார்கள். பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த நாட்டில் அமைச்சரவை இருந்தாலும் அதற்கு மேலாக ஒரு உயர்பீடம் அமைத்து எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களையும் உள்வாங்கி இனப்பிரச்சனைக்கான தீர்வையும் நூறுநாள் வேலைத்திட்டத்தினுள் அடக்கவேண்டுமென செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மாற்றத்தின் அடிப்படையில் தான் கிழக்கு மாகாணசபையில் ஒரு ஆட்டம் வந்தது.ஒரு அதிர்ச்சிவந்தது.ஒரு தொங்கு நிலை வந்தது.கிழக்கு மாகாணசபையில் அதிக ஆசனங்களைக்கொண்ட பெரிய கட்சி என்ற அடிப்படையில் முதலமைச்சர் பதவியை பெறுவதற்காக சகல மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.அதில் உறுதியாகவும் இருந்தோம்.

ஆனால் எங்களது கனவு பலிக்கவில்லை.இது தொடர்பான காரணத்தினை நீங்கள் அறியவேண்டும். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கலக்க நிலையிருக்கின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செய்வது கொள்கைரீதியான அரசியலாகும். எமது மக்களின் உரிமைகள் பெறப்படவேண்டும் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் .நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல,நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழவேண்டும் என போராடிக்கொண்டுள்ளோம்.

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்வது கொள்கை ரீதியான அரசியல் அல்ல.அவர்கள் செய்வது அரசியல் வியாபாரம்.2010ஆம் ஆண்டு ஐ.தே.க.வுடன் பாராளுமன்ற தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் பின்னர் மகிந்த அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை வகித்தார்கள்.மகிந்த ராஜபக்ஸ 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாக போட்டியிட்டபோது அவரது கூண்டுக்குள் இருந்துவெளிவந்த மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளின் ஆதரவுடனும் வெற்றியீட்டப்போகின்றார் என்ற நிலைமையேற்பட்ட பின்னர் அதிலும் தபால் மூல வாக்களிப்பு நிறைவுபெற்ற பின்னர் மகிந்த அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபக்கம் வந்தனர்.

இவ்வாறு மைத்திபால சிறிசேனவின் பக்கம் வந்தவர்கள் கிழக்கு மாகாணசபையில் ஏழு உறுப்பினர்களைக்கொண்டுள்ள நிலையில் தற்போது அவற்றினை பத்து உறுப்பினர்களாக மாற்றிக்கொண்டார்கள்.மட்டக்களப்பில் இருந்து இரண்டு பேரை உள் எடுத்தார்கள்,அம்பாறையில் இருந்து ஒருவரை எடுத்தார்கள்.அதற்கு மேலாக முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி வழங்கி எனக்கும் ஒரு அமைச்சு தந்தால் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் எனது பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது,அமைச்சராக வந்தால் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று கூறி எமது முன்னாள் முதல்வர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளரிடம் சென்று சத்தியக்கடதாசியில் கையொப்பம் இட்டுவிட்டு சம்பந்தர் ஐயாவை பார்க்கவருகின்றார்.அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆட்சியமையுங்கள் ஆதரவு வழங்குகின்றோம் என்று கூறுகின்றார்.

எங்களிடம் 11 ஆசனங்கள் உள்ளது.அவரிடம் ஒன்றே உள்ளது.19 ஆசனங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு தேவையாகும்.மைத்திரி பக்கம் வந்த முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் மகிந்த பக்கம் சென்று பிள்ளையான் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் சத்தியக்கடதாசியை வாங்கியதன் பின்னரே முதலமைச்சரை நியமித்துள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.இதுதான் நடந்த அரசியல்.

இருந்தபோதிலும் கிழக்கு மாகாணசபையில் கடந்த காலத்தில் நடந்த அநியாயங்கள்,அட்டுழிங்களை செய்தார்கள்.நாங்கள் இது தொடர்பில் பல தடவைகள் குரல்கொடுத்துள்ளோம்.நியமனங்கள் பல முறைகேடுகள் நடந்தேறின.இவற்றினை நிறுத்த வேண்டும். அதற்காக நாங்கள் இம்மாகாணசபை ஆட்சி அதிகாரங்களுக்குள் பங்குபற்ற வேண்டும்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மேலதிகமாக நான்காயிரம் வாக்குகளை அளித்திருந்தால் பதின்மூன்று ஆசனங்களை உருவாக்கி மேலதிகமாக இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்று பதினைந்து ஆசனங்களுடன் ஆட்சியை அமைத்திருப்போம். எங்களுடைய மக்கள் வாக்களிப்பில் அக்கறை காட்டுவதில்லை. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பட்டிருப்பு தொகுதியில் எண்பத்து நான்காயிரம் வாக்குகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் நாற்பத்து நான்காயிரமாகும். தமிழ்ப் பிரதேசங்களில் ஐம்பது வீதத்திற்கும் குறைவான வாக்குகளே அளிக்கப்படுகின்றன. எழுபத்தெட்டுவீதம் தமிழர்கள் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கென இருக்கின்ற பிரதிநிதிகள் மூன்றாகும். இருபத்திரண்டு வீதம் முஸ்லிம்களுக்கான பிரதிநிதிகள் இரண்டாகும். காரணம் எமது மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்வதில்லை.ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினiரை தெரிவுசெய்யும் வாக்குகள் குப்ப கூடைகளுக்குள் இடப்படுகின்றன. . இந்த நிலை மாறவேண்டும்.

கடந்த வடமாகாணசபை தேர்தலில் 70வீதம் வாக்களித்து 30ஆசனங்களை கொடுத்துள்ளனர்.அதன்மூலமாக வடமாகாணசபையில் எமது ஆட்சி அதிகாரம் நடைபெறுகின்றது.கடந்த காலத்தில் கொன்றொழிக்கப்பட்ட எமது மக்களுக்காக நியாயம் வேண்டி,அழிக்கப்பட்ட சொத்துகளுக்கான நியாயம்வேண்டி ஐ.நா.மனித  உரிமைகள் ஆணையத்துக்கு சென்றுள்ளோம்.

இந்த பிரேரணை இந்த ஆட்சிக்கு எதிரானது அல்ல.கடந்த காலத்தில் எமது மக்களை கொலைசெய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது.