மட்டக்களப்பில் பொலிஸாருக்கு சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கருத்தரங்கு

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான இரண்டுநாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்றது.


மட்டக்களப்பு, உதவிப்பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் தேவை நாடும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இன்று சனிக்கிழமை(31) காலை ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் தேவைநாடும் மகளிர் அமைப்பின் கொழும்பு காரியாலய அதிகாரி திருமதி சந்திரா தியாகராஜா,அமைப்பின் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன், இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன்,அமைப்பின் உளவள துணையாளர் ஜெயதீபா பத்மஸ்ரீ, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ்,மேரி மெக்டாலின் சுரேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வின்போது பால்நிலை வன்முறைகள் தொடர்பான சம்பவங்களை கையாளவும் சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த பயிற்சிநெறியின்போது தேவை நாடும் மகளிர் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைதொடர்பில் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கையேடும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் தெரிவித்தார்.