மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் இருந்து படுவான்கரைக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொண்ட சேவை பகிஸ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இப்பிரதேசத்தில் உள்ள முச்சக்கர வண்டியாளர்களின் செயற்பாடுகளை கண்டித்து படுவான்கரைக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இதன் காரணமாக பல்வேறு தேவைகளுக்காக களுவாஞ்சிகுடி நகருக்கு வந்த படுவான்கரை பிரதேச மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.முக்கியமாக களுவாஞ்சிகுடி நகரில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலையேற்பட்டது.
படுவான்கரைக்கு செல்லும் முச்சக்கர வண்டிகள் அதிகளவான பயணிகளை ஏற்றிச்செல்வதாகவும் தனிநபர் கட்டணம் அறவீடுகளை மேற்கொள்வதாகவும் இவற்றினை நிறுத்த வாடகை சேவையினை சட்டதிட்டங்களுக்கு அமைய நடத்தவேண்டும் எனக்கோரியே இந்த சேவை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் குறித்த தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தவல தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து சேவை பகிஸ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
படுவான்கரை பிரதேசத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடுவது எனவும் சட்டத்திற்கு முரணாக ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் வழங்கிய உறுதிமொழியையடுத்தே இந் சேவை புறக்கணிப்பு நிறைவுக்கு வந்தது.