பாரம்பரிய பொருட்களின் புகைப்படங்கள் கொண்ட “பெட்டகம்” நூலின் வெளியீடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய பொருட்களின் புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பிலான குறிப்புகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “பெட்டகம்” நூலின் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கலை,கலாசார,பண்பாட்டு பிரிவினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டுவந்த பொருட்களின் அரிதான புகைப்படங்களை தாங்கியவாறு வெளிவந்துள்ளது.

இதன் வெளியீட்டு விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் உட்பட பிரதேச செயலாளர்கள்,கலாசார உத்தியோகத்தர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் முதல் பிரதியினை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனுக்கு வழங்கி நூல் வெளியீட்டினை ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் நூலின் ஆய்வுரையை மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் நிகழ்த்தியதுடன் நூல் ஏற்புரையினை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் நிகழ்த்தினார்.

அண்மையில் மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்ட பாரம்பரிய பொருட்களின் கண்காட்சிக்கு இணைவாக இந்த நூல் வெளியீடுசெய்யப்படுவதாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய பண்டைய காலம் தொடக்கம் புழக்கத்தில் இருந்து தற்போதைய காலத்தில் அருகிவரும் பொருட்களின் தொகுப்புகளைக்கொண்டதாகவும் அந்த புகைப்படங்கள் தொடர்பிலான விளக்கங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நூலின் மூலம் எதிர்கால சந்ததியினர் தமது பண்டைய பொருட்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் மலர்ச்செல்வன் தெரிவித்தார்.