2014ம் ஆண்டுக்கான சிறிய கண்டுபிடிப்பாளர்களை தெரிவுசெய்யும் முகமாக இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்குனர் போட்டியில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களான தரம் 13 இல் கல்வி பயிலும் சத்தியவரதன்-கேனுர்ஷன் மற்றும் தரம் 07 இல் கல்வி பயிலும் கே.கேதீஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்து இந்த ஸ்மாட் தெளிகருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதனை வலயமட்டம், மாகாண மட்டம் வரை போட்டிக்காக கொண்டு சென்று மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாகாண மட்டத்தில் தெரிவாகிய ஸ்மாட் தெளிகருவியானது தேசிய மட்டத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. கடந்த 2014.10.31 தொடக்கம் 2014.11.02 வரை கொழும்பில் நடைபெற்ற இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் கண்காட்சியில் வைக்கப்பட்ட ஸ்மாட் தெளிகருவியானது அதனுடைய உற்பத்தி மற்றும் செயற்பாடு எதிர்கால பயன்பாடு என பல்வேறுபட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினரின் சிறந்த கண்டுபிடிப்பாளர் தெரிவில் விவசாய தொழிநுட்ப பிரிவில் தேசிய மட்டத்தில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மாட் தெளிகருவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
கிடைத்த வெற்றிக்கு பாடசாலையின் அதிபர் திரு. தினகரன் ரவி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெறுவதற்கு மாணவர்களுக்கு வழியமைத்துக்கொடுத்த விஞ்ஞான ஆசிரியர் திரு.ரி.முரளிதரன் உட்பட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஸ்மாட் தெளிகருவிக்குரிய மொழி பரிமாற்றத்தை வழங்கிய திரு.டி.குகதாசன் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் குலாத்தினர் பெரிதும் ஒத்துழைப்பு நல்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடங்களில் இப்பாடசாலையில் இருந்து பல்வேறு கண்டுபிடிப்புக்கள் சிறிய கண்டுபிடிப்பாளர்கள் போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தும் மாகாண மட்டம்வரை சென்றிருந்தன.
தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமைசேர்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தி பாராட்டு தெரிவிக்கும் முகமாக இன்று (04) செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒன்றுகூடலின்போது மலர்மாலை அணிவித்து அமோக வரவேற்பு வழங்கப்பட்டிருந்த இதேவேளை வெற்றிபெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் முகமாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பாடசாலைக்கு வருகைதந்து வெற்றிபெற்ற மாணவர்கள் உட்பட ஆசிரியர்களுக்கும் தனது வாழ்துக்களையும் தெரிவித்திருந்தார்.