மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 48 பிரிவுகளிலும் கடமையாற்றும் கிராம அலுவலகர்கள், அப்பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (17) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த 09ஆம் திகதி வாரம் கூழாவடி மதுபானச்சாலையின் உரிமையாளர் ஒருவரால் கிராம அலுவலகர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், அவரது கமெரா மற்றும் கையடக்கத்தொலைபேசியும் சேதமாக்கப்பட்டதாக தெரிவித்தே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்தும் அவருக்காக நியாயம் வேண்டியும் மேற்படி கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தங்களின் பிரிவுகளுக்கு சென்று கடமையாற்ற அச்சமாக உள்ளது என்று மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவித்துவிட்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக மேற்படி கிராம அலுவலகர்கள் கூறினர்.
இருப்பினும், அத்தியாவசிய தேவை கருதி பிரதேச செயலத்துக்கு வருவோருக்கு மட்டும் கடமையாற்றுவதாகவும் கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் குறித்த கிராம சேவையாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.