இனநல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு

இனங்களிடையே நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பாடசாலை மட்டத்திலான செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


மகிந்த சிந்தனையின் கீழ் இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட்ட மதர் ஸ்ரீலங்கா திட்டம் மூலம் பாடசாலைகளில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இவர்களுக்கு பாடசாலையின் மாணவர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

பாடசாலையின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீரா பாலிகா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர்களான திருமதி அனேஸ் ஹரிதா, கணேசலிங்கம் ,பாடசாலையின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இரு பாடசாலை மாணவிகளும் அருகருகில் அமர்ந்திருந்து உரையாடும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டதுடன் இன நல்லுறவை ஏற்படுத்தும் கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

அத்துடன் இரு பாடசாலைகளின் நட்புறவைப்பேணும் வகையிலான நினைவுச்சின்னங்களும் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.