இப்பிரதேசத்தில் அதிகளவில் டெங்கு தாக்கத்துக்குள்ளானோர் செட்டிபாளையம் மற்றும் களுதாவளையில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த டெங்கு தாக்கத்துக்கு உள்ளான ஒருவர் செட்டிபாளையத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி செட்டிபாளையம் பகுதியில் இதுவரையில் எட்டுப்பேர் டெங்கு தாக்கத்துக்குள்ளாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் களுதாவளைப்பகுதியில் சுமார் நான்கு பேர் டெங்கு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிருஸ்ணகுமாரிடம் கேட்டபோது,
செட்டிபாளையம் பகுதியில் ஏழு பேரும் களுதாவளை பகுதியில் ஒருவரும் டெங்கு தாக்கத்துக்குள்ளானதாக வைத்தியசாலை அறிக்கைகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
செட்டிபாளையத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவருக்க டெங்கு தாக்கம் உள்ளபோதிலும் அவரின் இரண்டு சிறு நீரகங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும் டெங்கு தாக்கமும் ஏற்பட்ட நிலையில் அவர் மரணித்ததாகவும் தெரிவித்தார்.
டெங்கு தாக்கம் உள்ள பகுதியில் விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் நுளம்பு பெருக்கம் உள்ள பகுதிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான வகையில் காணிகளை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.